செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கான சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

Published On 2018-07-23 17:12 GMT   |   Update On 2018-07-23 17:12 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு மத்திய சுற்றுசூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. #maduraihighcourt

மதுரை:

தூத்துக்குடியைச் சேர்ந்த பிரின்ஸ் கார்டோசா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் கடந்த 2007-ம் ஆண்டு வழங்கிய அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் தயாரிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் ரசாயன பொருட்களில் சுற்றுச்சூழல் மாசுபடும் பொருட்களின் விகிதாசாரம் குறித்து மத்திய சுங்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

2007-ம் ஆண்டு 900 டன் முதல் 1200 டன் வரை காப்பர் தயாரிப்பதற்கான உரிமம் பெறும்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு 172 ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ளதாக தவறான தகவல் அளித்த வேதாந்தா நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உண்மையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு 102 ஏக்கர் பரப்பளவு நிலம் தான் உள்ளது. தவறான தகவலை மத்திய-மாநில அரசுக்கு வேதாந்தா நிறுவனம் அளித்துள்ளது.

மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய சுற்றுச்சூழல்துறை செயலாளர் மற்றும் மத்திய சுங்கத்துறை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பவும், வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News