செய்திகள் (Tamil News)

பண்ருட்டியில் வி‌ஷவண்டு கடித்து 50 பக்தர்கள் படுகாயம்

Published On 2018-07-28 13:16 GMT   |   Update On 2018-07-28 13:16 GMT
பண்ருட்டியில் ஊரணி பொங்கல் விழாவில் வி‌ஷவண்டு கடித்து 50 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை சத்யா பன்னீர்செல்வம் எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

பண்ருட்டி:

பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஊரணி பொங்கல் வைக்க அதே பகுதியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு சென்றனர்.

ஊரணி பொங்கல் வைக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் அங்கு இருந்த அரசமரத்தில் இருந்து ஏராளமான வி‌ஷ வண்டுகள் கூட்டமாக வந்து ஊரணி பொங்கல் வைத்துக் கொண்டிருந்த பக்தர்களை கடித்தது. இதனால் பக்தர்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர்.

ஆனால் அவர்களை விரட்டி, விரட்டி வி‌ஷவண்டுகள் தாக்கியது இதில் மாளிகைமேடு ஏரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த துர்க்கா, ராஜேந்திரன், புவனேஸ்வரி, கோதண்டம், ராமசாமி 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி தகவல் அறிந்ததும் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்றார். வி‌ஷ வண்டு தாக்கி படுகாயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அனைவருக்கும் பிரட், பிஸ்கெட், பால் வழங்கினார். 

Tags:    

Similar News