செய்திகள்

மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து 43 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

Published On 2018-07-30 03:16 GMT   |   Update On 2018-07-30 03:16 GMT
மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. ஆனாலும் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் நேற்று 21-வது நாளாக தடை நீடித்தது. #MetturDam
மேட்டூர்:

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைப்பொறுத்து அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நீர்வரத்தின் அளவை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 64 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. நேற்று மாலை 3 மணி நிலவரப்படி வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது.

இதனால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் விதித்த தடை நேற்று 21-வது நாளாக நீடித்தது. விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் காவிரி கரை, நடைபாதை, மீன்மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை கண்டு ரசித்தனர்.

அப்போது, சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.

காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த 23-ந் தேதி அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.

இதைத்தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடிக்கு மேல் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறப்பை விட அணைக்கு நீர்வரத்து பலமடங்கு அதிகமாக இருந்ததால் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் உபரிநீர் போக்கியில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி ஓடுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 59 ஆயிரத்து 135 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கர்நாடகத்தில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளதன் எதிரொலியாக நேற்று மதியம் நீர்வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அந்த நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வெளியேறிக்கொண்டு இருக்கிறது. அணை நீர்மட்டம் 120.25 அடியாக இருந்தது. #MetturDam

Tags:    

Similar News