செய்திகள்

சிதம்பரம் அருகே கிராமங்களில் வெள்ளம் வடியாததால் 8 ஆயிரம் பேர் தவிப்பு

Published On 2018-08-22 10:58 GMT   |   Update On 2018-08-22 10:58 GMT
கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ளம் வடியாததால் வீடு திரும்ப முடியாமல் 8 ஆயிரம் பேர் தவித்து வருகிறார்கள்.
சிதம்பரம்:

கர்நாடகா மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கிருந்து உபரிநீர் 2 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழணைக்கு வந்தடைந்தது. கீழணை நிரம்பியதால் அங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் அதிகநீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோர பகுதியான சிதம்பரம் அருகே உள்ள திட்டுக்காட்டூர், பெராம்பட்டு, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் உள்பட 7 கிராமங்களில் முதலில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அந்த கிராமங்களில் வசித்த பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.

இந்த நிலையில் கீழணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆறு, புதிய கொள்ளிடம் ஆறுகளின் பல இடங்களில் கரைகள் உடைந்து கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. எருக்கன் காட்டுபடுகை, அகரநல்லூர், பழைய நல்லூர், வேளக்குடி, வீரன்கோவில் திட்டு, பெரிய காரைமேடு, இளந்திரை, அம்பிகாபுரம், மடத்தான் தோப்பு, கீழகுண்டலபாடி உள்பட 24 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

தெருக்களில் இடுப்பளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கிராமங்களில் 8 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் கோவில்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுமார் 5 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கியுள்ளனர்.

இதையடுத்து கீழ் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு நேற்று முன்தினம் முதல் குறைக்கப்பட்டது. வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு குறைவாக இருந்தாலும் கிராமங்களில் சுற்றி தண்ணீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது.

வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி 7 நாட்கள் ஆகியும் இன்னும் வெள்ளம் வடியவில்லை. வீடுகளை சுற்றி தேங்கியுள்ள தண்ணீர் வெளியே செல்ல வழி ஏதும் இல்லாததால் தண்ணீர் அப்படியே நிற்கிறது.

திட்டுக்காட்டூர், பெரம்பாட்டூர், அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், வேளக்குடி போன்ற கிராமங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்கள் தண்ணீர் சூழ்ந்து காணப்படுவதால் தீவுபோல் காட்சியளிக்கிறது.

வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதால் முகாமில் தங்கி உள்ள பொதுமக்கள் வீட்டுக்குள் செல்ல முடியவில்லை. தெருக்களில் தண்ணீர் ஆறுபோல் ஓடுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் பேர் தவித்து வருகிறார்கள். சிலர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மொட்டைமாடியில் தஞ்சடைந்து கடந்த 3 நாட்களாக சமையல் செய்து அங்கேயே தங்கி உள்ளனர். பலர் போதுமான குடிநீரும், உணவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளதால் அதில் கொசுக்கள் மற்றும் வி‌ஷ பூச்சிகள் நடமாடுகின்றன. இதனால் பொது மக்கள் பலர் தங்கள் வீட்டுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர்.

பல கிராமங்களில் வீடுகளை சுற்றி தண்ணீர் நிற்பதால் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.

வேளக்குடி, பெரும்பட்டு, கீழகுண்டலபாடி, திட்டுக்காட்டூர் போன்ற பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் நெல், கரும்பு, மரவள்ளிகிழங்கு மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தன. இவைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிதம்பரம் அருகே உள்ள பல்வேறு அமைப்பினர் உணவு பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் போன்றவைகள் படகுகள் மூலம் கொண்டு செல்லப் படுகிறது. அதுபோல் கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் உள்ளிட்ட தீவினங்களும் படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
Tags:    

Similar News