செய்திகள்

தஞ்சை, திருவாரூர், நாகையில் தடையை மீறி பட்டாசு வெடித்த 76 பேர் மீது வழக்குபதிவு

Published On 2018-11-07 05:52 GMT   |   Update On 2018-11-07 05:52 GMT
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 76 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். #CrackersBursting #Diwali #CrackersCase
தஞ்சாவூர்:

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று உற்சாகமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. குறிப்பாக பல இடங்களில் அரசு அறிவித்த நேரத்தை மீறி பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தனர்.

காலை முதல் இரவு முழுவதும் பட்டாசு வெடி சத்தத்தை கேட்க முடிந்தது. குழந்தைகளும், பெண்களும், இளைஞர்களும் தெருக்களில் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

இதற்கிடையே அரசு அறிவித்த தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று தீபாவளியையொட்டி பல இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தடையை மீறி பட்டாசு வெடிக்கிறார்களா? என்று கண்காணித்தனர்.

இதில் மாவட்டம் முழுவதும் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 31 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் நகரில் தம்பித்துரை (வயது 24), சூர்யா (25), வெங்கடேஷ் (18), கொரடாச்சேரியில் வினோத் (22), சுதாகர் (30), கூத்தாநல்லூரில் சண்முகவேல் (32), வடபாதிமங்கலத்தில் பாப்பையன் (26), வைப்பூரில் பரரதி மோகன் (38), ரகுநாத் (28), நன்னிலத்தில் சக்திவேல் (40), பேரளத்தில் வேல்குமார் (20), வலங்கைமானில் பழனிவேல் (30), கார்த்தி கேயன் (25), வடுவூரில் விமல் (24) மன்னார்குடியில் நவீன்(24) உள்பட மொத்தம் 31 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 29 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று போலீசார் பல்வேறு இடங்களில் தடையை மீறி பட்டாசு வெடிக்கிறார்களா? என்று கண்காணித்தனர்.

இதில் தஞ்சை சாலைக்கார தெருவில் நள் ளிரவு 12 மணிக்கு வெடி வெடித்ததாக மாயக்காளை (50), மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த விக்கி (24), உள்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் நாகை மாவட்டத்திலும் அரசு தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. #CrackersBursting #Diwali #CrackersCase

Tags:    

Similar News