செய்திகள் (Tamil News)

மேட்டுப்பாளையத்தில் நெகிழ்ச்சி- கஜா புயல் பாதிப்புக்கு நிதி வழங்கிய பிச்சைக்காரர்

Published On 2018-12-02 05:51 GMT   |   Update On 2018-12-02 05:51 GMT
மேட்டுப்பாளையத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பிச்சைக்காரர் ஒருவர் நிதி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #GajaCyclone
மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் நிவாரணப்பொருள்களை சேகரித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில் நமது மேட்டுப்பாளையம் அமைப்பு மற்றும் அனைத்து பொதுநல அமைப்பினர் இணைந்து மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் பந்தல் அமைத்து நிவாரணப் பொருள்களை சேகரித்து வருகின்றனர். அந்த வழியே நடந்து செல்லும் பொதுமக்கள் நிவாரணத் தொகைகளையும் பொருள்களையும் வழங்கி செல்கின்றனர்.

நேற்று இரவு மாற்றுத்திறனாளி முதியவர் தயங்கியபடி நிவாரணத்தொகை சேகரிக்கும் மையம் முன்பு நின்றார். அங்கிருந்தவர்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டனர்.

அதற்கு அவர் நான் ஒரு பிச்சைக்காரன். பிச்சையாக கிடைத்த பணத்தில் சாப்பிட்டதுபோக 12 ரூபாய் மீதம் உள்ளது. அதனை புயல் நிவாரணத்திற்கு தர விரும்புகிறேன். அதனை வாங்கிக்கொள்வீர்களா? என்று கேட்டார். நெகிழ்ச்சியடைந்த முகாமில் உள்ளவர்கள் கண்டிப்பாக வாங்கிக்கொள்கிறோம் என்று கூறினர். மகிழ்ச்சியடைந்த பிச்சைக்காரர் பையில் வைத்திருந்த 12 ரூபாயை கொடுத்தார்.

விசாரித்ததில் அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மோகன்குமார் (வயது70) என்பது தெரியவந்தது. #GajaCyclone
Tags:    

Similar News