செய்திகள் (Tamil News)

நெல்லை அருகே அரசு பஸ்கள்- வேன் மோதல்: 6 பயணிகள் பலி

Published On 2018-12-23 07:52 GMT   |   Update On 2018-12-23 07:52 GMT
நெல்லை அருகே விபத்தில் 6 பயணிகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கயத்தாறு:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியில் இருந்து 15 பேர் ஒரு வேனில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர். வேனை பள்ளத்தூர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவஞானம் (வயது31), என்பவர் ஓட்டினார்.

வேன் இன்று காலை 5.20 மணிக்கு நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் புலவர்த்தான்குளம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது லேசான மழை பெய்து கொண்டிருந்தது. இந்த வேளையில் மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ் காரைக்குடி வேனை முந்தி செல்ல முயன்றது.

அப்போது பஸ், வேனின் பின்பகுதியில் லேசாக உரசியது. உடனே வேனில் வந்தவர்கள் அதில் இருந்து இறங்கி பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடுவழியில் நின்று வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் வாக்குவாதம் முடிந்து வேனும், பஸ்சும் புறப்பட தயாரானது. இந்த வேளையில் அந்த வழியாக சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது.

காலை நேரம் என்பதாலும், மழை தூறிக்கொண்டு இருந்ததாலும் நடுரோட்டில் நின்ற வேன் மற்றும் அரசு பஸ்சையும் டிரைவர் கவனிக்கவில்லை. இதனால் அந்த பஸ் முன்னால் நின்ற வேன் மற்றும் பஸ் மீது பயங்கரமாக மோதியது. பின்னர் சாலையோர தடுப்பில் மோதியது. இந்த பயங்கர விபத்தில் வேன் ரோட்டோரம் கவிழ்ந்தது. முன்னால் நின்ற பஸ்சின் பின்பகுதியும், பின்னால் மோதிய பஸ்சின் முன்பகுதியும் பயங்கரமாக சேத மடைந்தன. பஸ்சில் இருந்தவர்கள் அலறினார்கள்.

இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி மோதியதில் பஸ்சில் இருந்த பயணிகள் திருச்சி துறையூரை சேர்ந்த ஆனந்த ஜோதி மகன் அம்ஜத் குமார், பேச்சிமுத்து மகன் முருகன், தேவதாஸ் மகன் ஜீவா ரூபி, பாஸ்கர் ஆகிய 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். வேன் மற்றும் பஸ்சில் இருந்த 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, தாழையூத்து இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் பாளை தீயணைப்பு நிலைய வீரர்களும் அப்பகுதிக்கு விரைந்தனர்.

இதைத்தொடர்ந்து காயம் அடைந்த 18 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே மதுரையை சேர்ந்த மகாராஜன் மகன் பிரதீப் (26), குமரி மாவட்டம் விளாச்சேரியை சேர்ந்த தவசிமுத்து (47) ஆகிய 2 பேர் பலியானார்கள்.

விபத்தில் காயமடைந்த வர்கள் பெயர் விவரம் வருமாறு:-

வேனில் இருந்த காளியப்பன் (84), சேர்மராஜ் (55), செல்வி (50) மற்றொரு செல்வி (34), அனந்தராஜ் (10) (இவர்கள்) 5 பேரும் வேனில் இருந்தவர்கள்.

முத்துக்குமார் (26), அன்பு (24), இசக்கிமுத்து (25), அரிச்சந்திரா (26), முத்து கிருஷ்ணன் (24), ஹென்ஸ் (20), பால கிருஷ்ணன் (24), சதீஷ் (24), சேகர் (45), முத்துப் பாண்டி (29), வேல்முருகன் (24), பிரபு (34), தங்கத்துரை (40) (இவர்கள் 13 பேரும் பஸ்சில் இருந்தவர்கள்) என மொத்தம் 18 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

Tags:    

Similar News