செய்திகள்

மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடக கட்சிகள் வெற்று அரசியல் செய்கிறது- ஈஸ்வரன் பேட்டி

Published On 2018-12-26 14:39 GMT   |   Update On 2018-12-26 14:39 GMT
மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் வெற்று அரசியல் செய்து வருகின்றனர் என ஈஸ்வரன் தெரிவித்தார். #eswaran #mekedatuissue #karnatakagovt

பழனி:

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் பழனியில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட பின் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பழனி கோவில் வருமானத்தில் ஒரு பகுதியை நகரின் வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளை ஒன்றிணைத்து பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும். அப்போது தான் கல்வியின் தரம் உயரும். அத்துடன் கோவில் நகரமான பழனியை தலைமையிடமாக கொண்டு புதிதாக மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.

நல்லதங்காள் அணை, பச்சையாறு அணை உள்ளிட்ட திட்டங்கள் பழனி பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு மிகவும் அத்யாவசியமானது ஆகும். ஆனால் அந்த திட்டங்கள் தற்போது வரை கிடப்பில் போடப்பட்டது வேதனை அளிப்பதாக உள்ளது. அந்த திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். விடுதலை போராட்ட வீரரான தீரன் சின்னமலைக்கு பழனி பஸ் நிலைய வளாகத்தில் சிலை வைக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை தி.மு.க.வுடன் கொங்குநாடு நாடு மக்கள் தேசிய கட்சி கூட்டணியாகவே செயல்படும். 2014-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தேசிய நதிநீர் இணைப்பையும், கங்கை- காவேரி இணைப்பையும் நடத்தி காட்டுவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் அவை கடற்கரை மணலில் எழுதிய வாசகம் போலவே ஆகிவிட்டது.

இதன் காரணமாக தமிழகத்தில் பா.ஜ.க. மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது. சுற்றுலா தளமான பழனியில் இருந்து ஈரோடு, சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளுக்கான ரெயில் சேவை திட்டம், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்ட உடன் கூட்டணி கட்சியான தி.மு.க. தலைமையில் நிறைவேற்றப்படும். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. செயல்பாடு மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.

எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி நீடிக்காது. மேகதாது அணை பிரச்சினையில் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது. இது தெரிந்திருந்தும் கர்நாடகத்தை சேர்ந்த கட்சியினர் வெற்று அரசியல் செய்யவே தீவிரம் காட்டி வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார். #eswaran #mekedatuissue #karnatakagovt

Tags:    

Similar News