செய்திகள்

உடுமலையில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

Published On 2019-01-04 16:52 GMT   |   Update On 2019-01-04 16:52 GMT
உடுமலையில் வீட்டு மனைக்கு அங்கீகாரம் பெற ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கண்ணம நாயக்கனூர் சவுந்தர்யா கார்டனை சேர்ந்தவர் ஜெகன். இவர் உடுமலை ஸ்ரீராம் நகர் பகுதியில் 4.54 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி உள்ளார். இந்த மனைக்கு அங்கீகாரம் இல்லாததால் அங்கீகாரம் பெற கடந்த டிசம்பர் 20-ந் தேதி உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் குமாரை அணுகி உள்ளார்.

அதற்கு அவர் வளர்ச்சி கட்டணமாக ரூ. 10,118 மற்றும் கூடுதலாக தனக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறி உள்ளார். ஜெகன் பல முறை ஒன்றிய அலுவலகத்திற்கு மனை அங்கீகாரம் பெற வந்த பிறகு ரூ. 5 ஆயிரத்தை குறைத்து கொண்டு ரூ .15 ஆயிரம் வழங்கினால் மட்டுமே மனை அங்கீகாரம் தர இயலும் என்று ரமேஷ்குமார் உறுதியாக கூறி உள்ளார்.

இது குறித்து ஜெகன் திருப்பூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் ஜெகனிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ. 15 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினார்கள்.

அலுவலகம் சென்ற ஜெகன் பணத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் குமாரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் கவுசல்யா, எழில் அரசி மற்றும் போலீசார் ரமேஷ் குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு கணக்கில் வராத ரூ. 14 ஆயிரத்து 500- ஐ பறிமுதல் செய்தனர். 5 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. ரமேஷ் குமாரின் வீடு உடுமலை ராமசாமி நகரில் உள்ளது. அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அரை மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. அங்கு பணம் எதுவும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் எதுவும் தெரிவிக்கவில்லை.

பின்னர் ரமேஷ் குமாரை திருப்பூர் மாவட்ட குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். லஞ்ச வழக்கில் வட்டார வளர்ச்சி அலுவலர் கைது செய்யப்பட்டதால் அவரை சஸ்பெண்டு செய்ய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News