செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலில் செல்போன் பாதுகாப்பு கட்டணம் மூலம் ரூ.2 கோடி வருமானம்

Published On 2019-01-29 03:33 GMT   |   Update On 2019-01-29 03:33 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 10 மாதங்களில் செல்போன் பாதுகாப்பு கட்டணம் மூலம் ரூ.2 கோடி வருமானம் கிடைத்துள்ளது. #MaduraiMeenakshiTemple
மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் செல்போன்களை கொண்டு செல்ல கூடாது என்று ஐகோர்ட்டு கடந்த மார்ச் மாதம் தடை விதித்தது.

மேலும் கோவில் நிர்வாகம், பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை பாதுகாத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

பின்னர் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் 5 கோபுர வாசல்களிலும் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க தனி அறைகள் அமைக்கப்பட்டு, அங்கு தற்காலிக ஊழியர்களை நியமித்தது. மேலும் செல்போன் ஒன்றை பாதுகாக்க அங்கு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்டது. இதன்மூலம் கோவிலுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.

இதற்கிடையே மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மோகன்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மீனாட்சி அம்மன் கோவிலில் இதுநாள் வரை செல்போன் கட்டணமாக எவ்வளவு ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகத்திடம் கேள்வி கேட்டு இருந்தார். அதில் நிர்வாகம் கொடுத்த தகவல் படி கடந்த 10 மாதங்களில் செல்போன் பாதுகாப்பு கட்டணம் மூலம் ரூ.1 கோடியே 99 லட்சத்து 10 வசூலாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கட்டணத்தை ரூ.5 ஆக குறைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #MaduraiMeenakshiTemple

Tags:    

Similar News