செய்திகள்
கோப்புப்படம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிசிஐடி விசாரணை பாரபட்சமின்றி நடத்தப்படும்- ஐ.ஜி. ஸ்ரீதர்

Published On 2019-03-13 08:57 GMT   |   Update On 2019-03-13 08:57 GMT
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை பாரபட்சமின்றி நடத்தப்படும் என்று ஐ.ஜி. ஸ்ரீதர் தெரிவித்தார். #PollachiAbuseCase #PollachiCase #CBCID
கோவை:

பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. ஸ்ரீதர் இன்று கோவை வந்தார்.

போலீஸ் விருந்தினர் மாளிகைக்கு வந்த அவரிடம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பந்தமான ஆவணங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் வழங்கினார்.

பின்னர் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. ஸ்ரீதர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு நிஷா தலைமையில் ஒரு டி.எஸ்.பி., 5 இன்ஸ்பெக்டர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தையும் பொள்ளாச்சி போலீசாரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அதில் எவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்பது இனிமேல் தான் தெரிய வரும்.

குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்த பின்னர் இதில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தெரிய வரும்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை பாரபட்சமின்றி நடத்தப்படும். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும். யார் எந்த தகவலை கொடுத்தாலும் அதனை உள்வாங்கி விசாரணை நடத்தப்படும்.

இந்த வழக்கில் கைதான 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். இது தொடர்பாக சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.

இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு செல்லும் பட்சத்தில் எங்களின் விசாரணை ஆவணங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

எது உண்மையோ அதன் அடிப்படையில் விசாரணை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். #PollachiAbuseCase #PollachiCase #CBCID
Tags:    

Similar News