செய்திகள் (Tamil News)

நல்ல தலைவர்களை தேர்ந்தெடுப்பது இளைஞர்கள் பொறுப்பு- கமல்ஹாசன்

Published On 2019-04-06 06:06 GMT   |   Update On 2019-04-06 06:06 GMT
நல்ல தலைவர்களை தேர்ந்தெடுப்பது இளைஞர்கள் பொறுப்பு என்று ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan
ஈரோடு:

பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று மாலை ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.

காமராஜர், எம்ஜிஆர் போன்ற பெரிய தலைவர்கள் பெரிதாக படித்தவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் மக்களை படித்தவர்கள், அவர்களை பார்த்து, படித்து நான் இங்கு வந்திருக்கிறேன். இந்த தேர்தல் பிரதமர் யார் என்று முடிவு செய்வதற்கான தேர்தல் அல்ல.

நம்முடைய எதிர்காலம் என்ன என்று நாம் முடிவு செய்யும் தேர்தல். நாட்டுக்கு நல்லது எது என முடிவு செய்யும் தேர்தல். யார் பிரதமர் என்பதை தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்கள் சேர்ந்து தான் முடிவு செய்ய வேண்டும். இப்போதே முடிவு செய்து சொல்வது என்பது அரசியல் மாண்பு இல்லை.

ஓட்டுப்போடுவதை அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என இளைஞர்கள் விட்டுவிடக்கூடாது. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என 30 ஆண்டுகளை கடந்து விட்டீர்கள். நல்ல தலைமையை தேர்ந்தெடுப்பது உங்கள் பொறுப்பு.

தமிழகம் புரட்சியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. அதற்கு வலுசேர்க்க மக்கள் நீதி மய்யத்தில் சேர திமுக, அதிமுகவில் இருந்து ஏராளமான இளைஞர்கள் வருவார்கள். எங்களை நோக்கி இளைஞர்கள் வரக்காரணம், நாங்கள் நேர்மையானவர்கள் என்பது தான்.

பண மூட்டை பதுக்கிக் கொண்டிருக்கும் திருடர்கள் எப்படி பேச முடியும். இப்போது திருடர்களுக்கு தேள் வேறு கொட்டி விட்டது, இனி பேசவே மாட்டார்கள். ஈரோட்டில் இருந்த பெரியவர் கொடுத்த தைரியத்தில் தான் நான் இவ்வளவு தைரியமாக பேசுகிறேன். யாரையும், எந்த தலைவரையும் அவமதிப்பது என்னுடைய நோக்கமல்ல. ஆனால் திருடனை, திருடன் என்று சொல்லும் தைரியம் எனக்கு உள்ளது. இந்த தைரியம் தமிழ் மக்களுக்கு வந்தே ஆக வேண்டும்.

ஊழல் செய்பவர்கள் எல்லோருமே திருடர்கள் தான். அவர்களை நீங்கள் வணங்கக் கூடாது. அவர்கள் உங்களை வணங்க வைக்க வேண்டும். நம்முடைய குடியரசுக்கு வணங்கியாக வேண்டும். மாண்புள்ள தலைவர்கள் பலர் இருந்த தமிழ்நாடு, திருடர்கள் நாடாக மாறிவிடக் கூடாது. இது திரு நாடு, திருடர்கள் நாடு அல்ல.

ஆட்சியாளர்கள் திருடுவதை நிறுத்தினாலே, 2 தமிழ்நாடு நடத்த முடியும். இதை நீக்கியே ஆக வேண்டும். இவர்கள் இத்தனை நாள் மாண்புடன் வணங்கிக் கொண்டிருந்த 2 கழகங்கள் அன்றைய தமிழகத்தின் தேவையாக இருந்தது. அதனால் அப்போது அவர்கள் வந்தார்கள்.

இன்றைய தேவை அவர்கள் அகற்றப்பட வேண்டும். காலம் உங்களுக்கு காட்டும் செய்தியாக மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். நாம் நல்ல ஒரு காலத்தை நோக்கி தமிழகத்தை நடத்துவதற்கு மக்கள் இந்த தேர்தலில் யோசித்து செயல்பட வேண்டும்.

இளைஞர்கள் நோட்டாவுக்கு ஓட்டுப் போடாதீர்கள். நாடு நன்றாக இருக்க, உங்கள் மனசாட்சி சொல்லும் நல்லவருக்கு ஓட்டுப் போடுங்கள். அந்த நல்லவர் கண்டிப்பாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக இருப்பார். ஓட்டு போடப் போகும் போது உங்கள் மனதை மாற்ற பல வேலைகள் நடக்கும்.

ஆனால் எதிர் காலத்தை மனதில் வைத்து கொண்டு ஓட்டுப் போடுங்கள். உங்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் நீதி மய்ய பிரதிநிதி தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் அவரது ராஜினாமா கடிதம் உங்களுக்கு வந்து சேரும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan

Tags:    

Similar News