செய்திகள்

தஞ்சை அருகே விவசாயியை கடிக்க முயன்ற பாம்பை கொன்று உயிரைவிட்ட நாய்

Published On 2019-04-27 10:44 GMT   |   Update On 2019-04-27 10:44 GMT
வயல் பகுதியில் விவசாயியை கடிக்க முயன்ற பாம்பை கொன்று நாய் உயிரைவிட்ட நெகிழ்ச்சி சம்பவம் தஞ்சையில் நடந்துள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே வேங்கராயன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50) விவசாயி, இவருக்கு தேவகி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நடராஜன் கடந்த 4 வருடங்களாக பப்பி என்ற நாயை வளர்த்து வருகிறார்.

பப்பியை தனது குடும்பத்தில் ஒருவராக பார்த்துக்கொண்டார். அதன் மீது அவரது குடும்பத்தினர் அதீத பாசம் கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை பப்பியை அழைத்துக்கொண்டு நடராஜன் வயல் பகுதிக்கு சென்றுள்ளார். நடராஜன் முன்னே செல்ல பப்பி நாய் பின்னே சென்றது.

அப்போது 5 அடி நீளமுள்ள ஒரு பாம்பு வயலில் இருந்து ஊர்ந்து வந்துள்ளது. அதனை பார்த்த நடராஜன் அதிர்ச்சி அடைந்து அப்படியே நின்றுள்ளார். அப்போது அந்த பாம்பு நடராஜனை கடிப்பதற்காக சீறியுள்ளது. இதனை பார்த்த பப்பி பாய்ந்து சென்று பாம்பை கடித்துள்ளது. இதில் நாய்க்கும் பாம்புக்கும் இடையே கடுமையாக சண்டை நடந்தது. நடராஜன் உடனே வீட்டிற்கு சென்று கம்பை எடுத்துக்கொண்டு பாம்பை அடிப்பதற்காக ஓடிவந்துள்ளார்.

அப்போது முட்புதற்குள் சென்ற பாம்பை நாய் விடாமல் சென்று பிடித்து வெளியில் கொண்டுவந்து கடித்துகுதறியது. இதில் பாம்பு இறந்தது. உடனே நடராஜன் நாயை கட்டியணைத்து தூக்கிகொண்டு வீட்டிற்கு சென்று நடந்ததை கூறி தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் பாம்பை கடித்ததால் உடலில் வி‌ஷம் பரவி நாயும் சிறிது நேரத்தில் இறந்தது அதனை கண்டு அவரது குடும்பத்தினர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்து பாம்பை கடித்து உயிர்விட்ட நாயை பார்த்து சென்றனர்.பின்னர் நாயை வீட்டின் அருகில் குழிதோண்டி புதைத்தனர். 

Tags:    

Similar News