செய்திகள்

வேட்பாளர்கள்-நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் விருந்து

Published On 2019-05-27 05:28 GMT   |   Update On 2019-05-27 05:28 GMT
பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற உதவிய மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் விருந்து வைத்தார்.
சென்னை:

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். கட்சி தொடங்கி 14 மாதத்துக்குள் தேர்தலில் குதித்தார்.

கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு முழுமை பெறாவிட்டாலும் கூட தேர்தலில் அந்த கட்சிக்கு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் கிடைத்துள்ளது.

கமலோடு மூன்றாம் இடத்துக்கு போட்டியிட்ட மற்ற கட்சிகளான அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி இரண்டும் ஓரளவு செல்வாக்கும் அனுபவமும் உள்ள கட்சிகள். அப்படி இருந்தும் கமல் கட்சி 11 தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்தது.

4 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளை கடந்தது. மக்கள் நீதி மய்யம் பெற்ற மொத்த வாக்குகள் சுமார் 14,74,946.

இந்த அளவுக்கு அதிக வாக்குகள் பெற உதவிய கட்சி நிர்வாகிகளுக்காக நேற்று விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.

தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த விருந்துக்கு மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், கட்சி தலைமை அலுவலக நிர்வாகிகள், பணியாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி நேற்று மதியம் தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நடைபெற்றது.

கமல்ஹாசன் அடுத்து வரும் தேர்தல்களுக்காக கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளார். இதற்காக மாநிலம் முழுவதும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். காலியாக உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை களம் இறக்க திட்டமிட்டு உள்ளார். நேற்று அளித்த விருந்தில் இதற்காக சில ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார்.
Tags:    

Similar News