செய்திகள் (Tamil News)
சாயக்கழிவு கலந்து நுங்கும் நுரையுமாக ஓடும் தண்ணீரை படத்தில் காணலாம்.

நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீர்- விவசாயிகள் அதிர்ச்சி

Published On 2020-07-31 12:37 GMT   |   Update On 2020-07-31 12:37 GMT
சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலந்து வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது ஒரத்துப்பாளையம் அணை.

இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் சாயக்கழிவு நீர் அதிக அளவில் கலந்ததால் அணை நீர் முற்றிலும் மாசுபட்டது. மேலும் அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் மூலம் நொய்யல் ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் உள்ள கிணறுகள், நீர் நிலைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன்பேரில், அணைக்கு வரும் தண்ணீரில் முற்றிலுமாக சாயக்கழிவுகள் இல்லாத வரை அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், திருப்பூர் பகுதியில் செயல்படும் சாய தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே வெளியேற்றும் தொழிற்சாலைகளை கண்டறிந்து அவைகளை சீல் வைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாயக்கழிவு நீரை அப்படியே வெளியேற்றிய 100-க்கும் மேற்பட்ட சாய தொழிற்சாலைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டறிந்து சீல் வைத்தனர். அதன்பிறகும் திருப்பூர் பகுதியில் மழை பெய்யும் போது மழை நீரோடு மீண்டும் சாயக்கழிவு நீர் கலந்து வந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் முதல் 3 மாதங்கள் கடுமையான ஊரடங்கு இருந்த சமயத்தில் மழை பெய்த போது சாயக்கழிவு நீர் கலக்காமல் சுத்தமான தண்ணீர் ஒரத்துப்பாளையம் அணைக்கு வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 30 நாட்களாக தமிழகத்தில் தொழிற்சாலைகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதையொட்டி திருப்பூர் பகுதியில் சாய தொழிற்சாலைகள் இயங்க ஆரம்பித்தன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததால் மீண்டும் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் கலந்து நுங்கும், நுரையுமாக செல்கிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பல ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா முழு ஊரடங்கு சமயத்தில் நல்ல தண்ணீராக நொய்யல் ஆற்றில் ஓடியது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டு தற்போது தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதால் மீண்டும் அதிக அளவில் சாயக்கழிவு கலந்து செல்கிறது. இந்த தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியாது’ என்றனர்.

Similar News