செய்திகள் (Tamil News)
மாணவர்கள் போராட்டம்

மருத்துவ கல்லூரி மாணவர்கள் விடிய விடிய போராட்டம்

Published On 2021-01-29 07:07 GMT   |   Update On 2021-01-29 07:07 GMT
கல்வி கட்டணத்தை குறைக்காததால் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி 2013-ம் ஆண்டு முதல் அரசு நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியை தமிழக அரசு ஏற்ற பின்பும் மாணவர்களிடம் அரசு கல்லூரிக்கு உரியகட்டணம் வசூலிக்காமல் தனியார் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை கண்டித்தும் அரசு அறிவித்த கட்டணத்தை வசூலிக்க கோரியும் கல்லூரி மாணவ- மாணவிகள் பல்வேறுகட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கிவந்த ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு அதற்கான அரசாணை தமிழக அரசால் நேற்று வெளியிடப்பட்டது. இதனால் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில் தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கிவந்த ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரியை அரசு தற்போது சுகாதாரதுறையின் கீழ் கொண்டுவந்து அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆனால் அதில் மாணவர்களின் கல்விகட்டணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதனால் நாங்கள் படிக்கும் கல்லூரியில் அரசு மருத்துவ கல்லூரிக்கு உரிய கல்வி கட்டணம் வசூக்கப்படும் என்ற அறிவிப்பு வரும்வரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

நேற்று இரவும் மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 52-வது நாளாக மாணவ-மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News