செய்திகள் (Tamil News)
ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களில் வந்தவர்களுக்கு ராக்கி கயிறு கட்டப்பட்டது

ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களுக்கு ராக்கி கயிறு கட்டி விழிப்புணர்வு

Published On 2021-06-01 08:15 GMT   |   Update On 2021-06-01 08:15 GMT
மதுரை மாநகரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் அமைப்பு பல்வேறு நூதன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மதுரை:

மதுரையில் தளர்வற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் சிலர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்து வருகின்றனர். அவர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பது வழக்கத்தில் உள்ளது. ஒரு சிலரின் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனாலும் மோட்டார் சைக்கிள் ரோமியோக்கள் ரோட்டில் வலம் வருவதை போலீசாரால் நிரந்தரமாக தடுத்து நிறுத்த முடியவில்லை.

இந்த நிலையில் மதுரை மாநகரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் அமைப்பு பல்வேறு நூதன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அவர்கள் மதுரை மாநகரின் பல்வேறு முக்கிய போக்குவரத்து சந்திப்புகளுக்கு தாம்பூல தட்டுகளுடன் வந்தனர். அதில் மஞ்சள், குங்குமம் மற்றும் ராக்கி கயிறு ஆகியவை இருந்தன.

ஊரடங்கு விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தவர்களுக்கு அந்த அமைப்பினர் ராக்கி கயிறு கட்டி நூதன விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இது பொதுமக்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.


Similar News