செய்திகள் (Tamil News)
குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்து செல்லும் காட்சி.

நெல்லை, தென்காசியில் கனமழை- குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது

Published On 2021-10-30 07:15 GMT   |   Update On 2021-10-30 07:15 GMT
பாபநாசம் அணைக்கு இன்று காலை விநாடிக்கு 1,480 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1,405 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் பருவமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய சாரல் மழை பெய்தது.

இந்தநிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 2-வது நாளாக நெல்லை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. தென்காசி மாவட்டத்திலும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது.

இன்று பகலும், நெல்லை, தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து சாரல் மழையும், கனமழையும் மாறி மாறி பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாளையில் 75 மில்லிமீட்டர் மழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக கருப்பாநதி அணைப்பகுதியில் 64 மில்லிமீட்டர் மழை பெய்தது.

சில இடங்களில் மழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. நெல்லை மேலப்பாளையம் வாட்டர் டேங்க் பகுதியில் மிகப்பெரிய வேப்ப மரம் இன்று அதிகாலையில் முறிந்து விழுந்தது.

எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள அந்த பகுதியில் இன்று அதிகாலை என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் பழுதான மின் கம்பிகளையும் உடனடியாக சரிசெய்தனர்.

சம்பவ இடத்திற்கு பாளை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர்.

பலத்த மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் இன்று கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்து சென்றது. எனவே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியவில்லை.

நெல்லை மாநகர பகுதியில் உள்ள தாழ்வான குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்து உள்ளது. நெல்லை சந்திப்பு, டவுன், பேட்டை ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி சாலைகள் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. தொடர் மழை காரணமாக மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணைக்கு இன்று காலை விநாடிக்கு 1,480 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1,405 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைநீர்மட்டம் 135.10 அடியாக உள்ளது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 135.43 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 321 கனஅடி தண்ணீர் வருகிறது. அணை நீர்மட்டம் 80 அடியாக உயர்ந்து உள்ளது. இதுபோல அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வருவதால் பல்வேறு அணைகளும் நிரம்பும் நிலையில் உள்ளன. வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணைகளுக்கு மட்டும் போதிய தண்ணீர் வராததால் நீர்மட்டம் குறைந்த அளவில் உள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விபரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

பாளை-75, மூலக்கரை பட்டி-67, கொடுமுடியாறு-65, கருப்பாநதி-64, சங்கரன்கோவில்-61.5, நெல்லை-57.8, நாங்குநேரி-51, அடவிநயினார்-48, களக்காடு-42.6, பாபநாசம்-42, நம்பியாறு-39, சேர்வலாறு-38, கன்னடியன்கால்வாய்-37, ஆய்க்குடி-36, மணி முத்தாறு-33, குண்டாறு-32, அம்பை-30, சேரன்மகாதேவி -29.8, செங்கோட்டை-29, தென்காசி-27.2, சிவகிரி-22, ராதாபுரம்-21, கடனாநதி-12, ராமநதி-5.


Similar News