செய்திகள்
சாலைகளில் உள்ள பட்டாசு குப்பைகளை நள்ளிரவில் அகற்றிய ஊழியர்கள்

சென்னையில் 48 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்

Published On 2021-11-05 09:26 GMT   |   Update On 2021-11-05 09:26 GMT
மழை மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தின் மூலம் உருவாகும் குப்பைகளை அகற்ற சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:

தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கொட்டிய மழையிலும் மக்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகையினை கொண்டாடினார்கள்.

தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் நகரில் குப்பைகள் குவியும். இதனை உடனே அகற்றுவதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி செய்து இருந்தார்.

மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் பட்டாசு குப்பைகளை உடனே அகற்றுவதற்கான விரிவான ஏற்பாடுகள் மண்டல அதிகாரிகள் தலைமையில் நடந்தன. நகரின் பல்வேறு பகுதிகளில் மழை தூறல் இருந்த போதிலும் குப்பை அகற்றும் பணிகளில் தொய்வில்லாமல் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு 1 மணிவரை நகர் முழுவதும் பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் 1,000 ஊழியர்கள் ஈடுபட்டனர். ஒவ்வொரு தெருக்களிலும் குவித்து வைக்கப்பட்டு இருந்த பட்டாசு குப்பைகள் இரவோடு, இரவாக அகற்றப்பட்டன.

நள்ளிரவு வரை 48 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு இருப்பதாக மாநகராட்சி கமி‌ஷனர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்தார்.

மழை மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தின் மூலம் உருவாகும் குப்பைகளை அகற்ற சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகரம் முழுவதும் 1,000 பேர் இந்த பணியில் ஈடுபட்டதால் குப்பைகள் தேங்காமல் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.

இன்றும் சாலையில் உள்ள குப்பைகளை எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கமாக வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும் ஊழியர்கள் மூலம் எடுக்கப்படுகிறது. அதன் அளவு இன்று பிற்பகல் தெரிய வரும்.

கட்டிடக்கழிவுகளும் பெருமளவு அகற்றப்பட்டுள்ளன. மழை நீர் தேங்காத வகையில் சாலைகளில் உள்ள பள்ளங்கள் உடனடியாக மூடப்படுகிறது. எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது என்பதை கண்காணித்து வருகிறோம். இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காதபடி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக 13.43 மெட்ரிக் டன் பட்டாசு குப்பை 9-வது மண்டலத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News