செய்திகள்
தக்காளி

தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை

Published On 2021-11-17 08:44 GMT   |   Update On 2021-11-17 08:44 GMT
தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் தக்காளி ஒரு கிலோ ரூ100-யை எட்டி உள்ளதால் இல்லத்தரசிகள் கடைகளில் ½ கிலோ, ¼ கிலோ என குறைந்த அளவிலான தக்காளியை மட்டுமே வீட்டுக்கு வாங்கி செல்கின்றனர்.
போரூர்:

கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. அங்கு பெய்து வரும் தொடர் கனமழையால் காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்த தோட்டங்களும் மழை வெள்ளத்தால் நாசமாகி விட்டது. இதன் காரணமாக அங்கிருந்து வரும் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமாக 70 லாரிகளில் வரும் தக்காளி தற்போது பாதியாக குறைந்து விட்டது. கடந்த ஒரு வாரமாகவே இது நீடித்து வருகிறது.

இதன் காரணமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கோயம்பேடு மார்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.72க்கும், சில்லரை விற்பனை கடைகளில் கிலோ ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் தக்காளி ஒரு கிலோ ரூ100-யை எட்டி உள்ளதால் இல்லத்தரசிகள் கடைகளில் ½ கிலோ, ¼ கிலோ என குறைந்த அளவிலான தக்காளியை மட்டுமே வீட்டுக்கு வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து மொத்த வியாபாரி ஜபார் பாய் கூறியதாவது :-

கோயம்பேடு சந்தைக்கு தினசரி 60 முதல் 70 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். தற்போது அதன் வரத்து பாதியாக குறைந்ததால் விலை அதிகரித்து வருகிறது. விலை உயர்வு காரணமாக கடந்த 2 நாட்களாக தக்காளி விற்பனை மிகவும் மந்தமாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News