தமிழ்நாடு (Tamil Nadu)
சென்னை விமான நிலையத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எந்திரம்

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க புதிய வசதி அறிமுகம்

Published On 2022-01-08 10:08 GMT   |   Update On 2022-01-08 10:08 GMT
பயணிகள் செக்-இன் நடைமுறையை இடையூறு இல்லாமலும், குறுக்கீடுகள் இல்லாமலும், விரைவாகவும் மேற்கொள்ள முடியும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு பயணிகளுக்கு செக்-இன் நடைமுறையை பயணிகள் விரைவாக மேற்கொள்ள வசதியாக காமன் யூஸ் செல்ப் சர்வீஸ் என்ற புதிய திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. அதற்காக 8 புதிய எந்திரங்கள் சென்னை உள் நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தின் உள்நாடு, சர்வதேச முனையங்களில் பயணிகள் புறப்பாடு பகுதிகளில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் எந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. இதன்படி விமானங்களில் செல்ல வரும் பயணிகள், அவர்களின் போர்டிங் பாஸ்களை பெறும் போது, உடமைகளின் மேல் ஒட்டக்கூடிய “டேக்“ என்ற ஸ்டிக்கர்களை, விமானநிலையத்தில் உள்ள தானியங்கி எந்திரங்களில் பயணிகள் பெற்று அவர்களின் உடமைகளில் அவர்களே ஒட்டிக்கொள்ளலாம்.

இதனால் பயணிகள் செக்-இன் கவுண்டரில் வரிசையில் நிற்பது தவிர்க்கப்படும் பயணிகளின் நேரமும் சேமிக்கப்படும்.தங்களுடைய உடமைகளில், அந்தந்த பயணிகளே நேரடியாக ஸ்டிக்கரை ஒட்டுவதால், கவுண்டரில் தவறுதலாக மாற்றி ஒட்டுவது போன்றவைகள் தவிர்க்கப்படும்.

பயணிகளின் உடமைகளில் சுயமாக பயணிகளே ஸ்டிக்கரை ஒட்டி, உடமைகளை விமானத்திற்கு அனுப்பும், பயணிகளின் பயண அனுபவத்தை அதிகரிக்கும் வகையிலான இந்த புதிய திட்டம் சென்னை விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் நவீனமயமாகி, செயல்பாட்டிற்கு வரும் போது, பயணிகள் தங்கள் உடமைகளில் அவர்களே ஸ்டிக்கா ஒட்டும் வசதி, முழுமையாக அமலுக்கு வரும். இதற்காக சென்னை உள்நாடு முனையம், சர்வதேச முனையம் ஆகியவற்றில் தலா 4 எந்திரங்கள் வீதம், 8 எந்திரங்கள் நிறுவப்பட உள்ளன.

இந்த எந்திரங்களை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கைகள் அதிகரிப்பை பொறுத்து இந்த எந்திரங்கள் மேலும் அதிகரிக்கப்படும்.

இதனால் பயணிகள் செக்-இன் நடைமுறையை இடையூறு இல்லாமலும், குறுக்கீடுகள் இல்லாமலும், விரைவாகவும் மேற்கொள்ள முடியும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News