தமிழ்நாடு (Tamil Nadu)

ஒரேநாளில் ரூ.224 கோடி - வருவாய் பத்திரப்பதிவு துறை சாதனை

Published On 2024-07-14 05:08 GMT   |   Update On 2024-07-14 05:50 GMT
  • பத்திர ஆவணங்கள் பதிவு மூலம் அதிக வருமானம் வருகிறது.
  • கடந்த 12-ந்தேதியன்று ஆனி மாதம் கடைசி முகூர்த்த நாள் மற்றும் ஆடி மாதம் பிறக்க இருக்கிறது.

சென்னை:

தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் பத்திரப்பதிவுத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. பத்திர ஆவணங்கள் பதிவு மூலம் அதிக வருமானம் வருகிறது. ஒரு சொத்தினை பத்திரப்பதிவு செய்வதற்கு சந்தை மதிப்பு மற்றும் பதிவு கட்டணம் என மொத்தம் 9 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. அதில் 2 சதவீதம் உள்ளாட்சிகளுக்கு போக மீதமுள்ள 7 சதவீதம் அரசு கஜானாவிற்கு வந்து விடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணங்கள் பதிவு அதிகரித்து வருவதால் அரசுக்கு வருமானமும் பெருகி வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.224.26 கோடி வருவாய் ஈட்டி பத்திரப்பதிவுத்துறை புதிய சாதனை படைத்துள்ளது. இதுதான் பத்திரப்பதிவுத்துறையின் ஒரு நாள் அதிகபட்ச வருவாய் ஆகும்.

இதுகுறித்து தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பத்திரப்பதிவு துறையில் ஆவணங்களைப் பதிவு செய்ய முன்பதிவு வில்லைகள் பதிவுத்துறை இணையதளம் மூலம் முன்பதிவு செய்யவேண்டும். முன்பதிவு செய்ய ஒரு சார்பதிவாளருக்கு தினந்தோறும் 100 முன் ஆவணப்பதிவு வில்லைகள் மட்டுமே பதிவுத்துறை இணையதளத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 12-ந்தேதியன்று ஆனி மாதம் கடைசி முகூர்த்த நாள் மற்றும் ஆடி மாதம் பிறக்க இருக்கிறது. எனவே பொதுமக்கள் எந்த சிரமமும் இல்லாமல் ஆவணப் பதிவை மேற்கொள்ளவும் முன்பதிவு வில்லைகள் கிடைக்கவில்லை என சிரமப்படக்கூடாது என்பதற்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஆவணப்பதிவிற்கான 100 வில்லைகள் சிறப்பு நிகழ்வாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 150 ஆக உயர்த்தப்பட்டது.

அதன்படி பொதுமக்கள் உயர்த்தப்பட்ட முன் ஆவணப்பதிவு வில்லைகளை பயன்படுத்தி 12-ந்தேதியன்று 20 ஆயிரத்து 310 ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டு உரிய சார்பதிவாளர்களால் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் அரசுக்கு ரூ.224.26 கோடி வருவாய் ஒரே நாளில் ஈட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News