தமிழ்நாடு (Tamil Nadu)

அனுமதியின்றி வீட்டில் வெடி பொருட்கள் பதுக்கி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது

Published On 2023-04-27 05:54 GMT   |   Update On 2023-04-27 05:54 GMT
  • திங்களூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அய்யர் தோட்டம் பகுதியில் சோதனையிட்டனர்.
  • போலீசாரை பார்த்ததும் அவர்கள் 5 பேரும் தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த திங்களூர் அருகே அய்யர் தோட்டம் பகுதியில் உள்ள காசுக்காரன்பாளையம் கிரே நகரில் ஒரு வீட்டில் சட்ட விரோதமாக வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திங்களூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து திங்களூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அய்யர் தோட்டம் பகுதியில் சோதனையிட்டனர்.

அப்போது அங்கு தனிமையில் ஒரு ஓட்டு வீடு மட்டும் இருந்தது. அந்த வீட்டிற்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அந்த வீட்டிற்கு முன்பு பட்டாசுகள், வெடிப்பொருட்கள் தயாரிக்கும் மூலப் பொருட்கள் இருந்தன. வீட்டுக்குள் 5 பேர் பட்டாசு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் 5 பேரும் தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் பெருந்துறை வி. மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ என்கிற சண்முகம் (37). அவரது மனைவி விஜயலட்சுமி (35). காசுக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்த மவுலீஸ்வரன், சகுந்தலா மணி (42), திங்களூர், பாண்டியம் பாளையம் பகுதியை சேர்ந்த திவாகர் (29), அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (44) என தெரிய வந்தது.

இதில் இளங்கோ என்கிற சண்முகம் இந்த வெடிப்பொருள் தயாரிப்பதற்கு மூளையாக செயல்பட்டு உள்ளார். அவர் போலீஸ் வரும்போது வீட்டில் இல்லாததால் தலைமறைவாகிவிட்டார். விசாரணையில் இளங்கோ அரசு உரிமம் பெறாமல் பட்டாசு தயாரித்து வந்தது தெரிய வந்தது. இளங்கோ வெளியே இருந்து பட்டாசு மூல பொருட்களை வாங்கி வந்து இங்கே வீட்டில் தயார் செய்து வந்ததும் தெரிய வந்தது.

Tags:    

Similar News