கீரிப்பாறை அருகே ரோட்டோரத்தில் சடலமாக கிடந்த திருநங்கை
- சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
- திருநங்கை தற்போது சாலையோரம் பிணமாக கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:
தேனி மாவட்டம் குமுளி பகுதியை சேர்ந்தவர் சுமன் (வயது 33). திருநங்கையான இவர் கடந்த 2 ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை வீர புலி பகுதியில் வசித்து வந்தார்.
கூலி வேலை செய்து வந்த சுமன் இன்று காலை வீரபுலி பகுதியில் ரோட்டோரத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் கீரிப்பாறை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
ரோட்டோரத்தில் பிணமாக கிடந்த சுமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பலியான திருநங்கை சுமனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. பிரேத பரிசோதனையில் தான் அவர் எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவரும். கடந்த வாரம் கன்னியாகுமரி பகுதியில் ரோட்டோரத்தில் திருநங்கை ஒருவர் பிணமாக கிடந்த நிலையில், மேலும் ஒரு திருநங்கை தற்போது சாலையோரம் பிணமாக கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.