தமிழ்நாடு (Tamil Nadu)

தீபாவளி பண்டிகைக்கு 6 சிறப்பு பலகாரங்கள் விற்பனையை 20 சதவீதம் உயர்த்த ஆவின் திட்டம்

Published On 2024-10-19 05:42 GMT   |   Update On 2024-10-19 05:42 GMT
  • பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
  • அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான தீபாவளி இனிப்புகளை வழங்கவும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

சென்னை:

சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட ஆவின் பொது மேலாளா்கள் மற்றும் துணைப் பதிவாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் பால் வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத கிராமங்களில் புதிய சங்கங்களை உருவாக்குவது, சங்க உறுப்பினா்களுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

மேலும், பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

தீபாவளியை முன்னிட்டு ஆவின் சார்பில் காஜு பிஸ்தா ரோல், காஜு கட்லி, நெய் பாதுஷா, முந்திரி அல்வா, மிக்சர், முறுக்கு உள்ளிட்ட 6 சிறப்பு பல காரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு தேவைக்கேற்ப இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டை விட நிகழாண்டில் தீபாவளி விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்கவும், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான தீபாவளி இனிப்புகளை வழங்கவும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை முதன்மைச் செயலர் சத்யபிரத சாகு, பால்வளத்துறை இயக்குநா் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநா் சு. வினீத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.

Tags:    

Similar News