தமிழ்நாடு
சரக்கு வாகனமும், லாரியும் நேருக்குநேர் மோதி விபத்தான காட்சி.

லாரி-சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து: டிரைவர்-கிளீனர் பலி

Published On 2022-06-18 05:52 GMT   |   Update On 2022-06-18 05:52 GMT
  • திடீரென லாரியும், சரக்கு வாகனமும் நேருக்குநேர் மோதி விபத்தானது.
  • சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் ஹரிஸ்குமார், கிளீனர் மஞ்சுநாத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

ஈரோடு:

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி பெங்களூரு நோக்கி சென்றது. இந்த லாரியை தர்மபுரி மாவட்டம் ஈசல்பட்டியை சேர்ந்த கருணாகரன் (32) என்பவர் ஓட்டி சென்றார்.

இதேபோல் கர்நாடகாவில் இருந்து கேரளாவை நோக்கி ஒரு சரக்கு வாகனம் புறப்பட்டது. இதை கர்நாடகா மாநிலம் டுங்கூரை சேர்ந்த ஹரிஸ்குமார் (28) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் கிளீனராக அதே பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் (30) என்பவரும் வந்தார்.

தேங்காய் லாரியும், சரக்கு வாகனமும் இன்று அதிகாலை 2.45 மணி அளவில் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரியும், சரக்கு வாகனமும் நேருக்குநேர் மோதி விபத்தானது.

இதில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் ஹரிஸ்குமார், கிளீனர் மஞ்சுநாத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். லாரி டிரைவர் கருணாகரன் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதுபற்றி தெரிய வந்ததும் அம்மாபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காயத்துடன் உயிருக்கு போராடிய லாரி டிரைவர் கருணாகரனை மீட்டு பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் பலியான டிரைவர் ஹரிஸ்குமார், கிளீனர் மஞ்சுநாத் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தின் காரணமாக பவானி-மேட்டூர் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் பொக்லைன் மூலம் விபத்தில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வாகன போக்குவரத்து தொடங்கியது.

Tags:    

Similar News