தமிழ்நாடு

டெல்டா மாவட்ட காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்

Published On 2023-08-03 10:12 GMT   |   Update On 2023-08-03 10:12 GMT
  • அனைவரது வாழ்விலும் காவிரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு வழிபடுவர்.
  • காலை முதலே பெண்கள் குடும்பம் குடும்பமாக வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கட்டுகடங்காத கூட்டம் காணப்பட்டது.

தஞ்சாவூர்:

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்த மாதம் . ஆடி மாதம் முழுவதுமே அம்மன் கோவில்களில் உற்சவங்கள் நடைபெறும்.

அந்த வகையில் ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, இந்த விழா காவிரி ஆறு பாயும் பகுதிகளில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

தமிழகத்தில் வளம் கொழிக்க வைக்கும் நதிகளில் ஒன்றான காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மேலும் அனைவரது வாழ்விலும் காவிரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு வழிபடுவர்.

அதன்படி இன்று ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் குறிப்பாக தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பெரிய கோவில் புது ஆற்றுப் படித்துறை, வடவாற்று படித்துறை, வெண்ணாற்றுப் படித்துறை, திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை, சுவாமிமலை காவிரி படித்துறை, கும்பகோணம் பாலக்கரை காவிரி படித்துறை, மகாமகக்குளம் உள்பட பல்வேறு காவிரி ஆற்றங்கரைகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.

திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள புஷ்ய மண்டப படித்துறைக்கு இன்று காலை முதலே பெண்கள் குடும்பம் குடும்பமாக வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கட்டுகடங்காத கூட்டம் காணப்பட்டது.

படித்துறையில் ஏராளமான பெண்கள் வாழை இலையை விரித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்தனர். மேலும் தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பனை ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, வளையல், அரிசி, வெல்லம், மலர், பேரிக்காய், கொய்யா, மாதுளை, விளாம்பழம் ஆகியவற்றை வைத்து விளக்கேற்றினர். தொடர்ந்து மாவிளக்கு, அரிசி, வெல்லம் கலந்த காப்பு அரிசி ஆகியவற்றை வைத்து சாம்பிராணி, ஊதுபத்தி உள்ளிட்ட வாசனைபொருட்களை ஏற்றி வழிபாடு செய்ததுடன் மஞ்சள் பிள்ளையாருக்கும், காவிரி தாய்க்கும் தாம்பூலத்தட்டில் கற்பூரத்தை ஏற்றி வழிபட்டனர்.

இந்த வழிபாடு முடிந்தவுடன் புத்தாடை அணிந்து வந்திருந்த புதுமண தம்பதியினர் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். தொடர்ந்து திருமணத்தின்போது தாங்கள் அணிந்து இருந்த மாலைகளை பைகளில் பத்திரமாக கொண்டு வந்து அவற்றை காவிரி ஆற்றில் புதுமண தம்பதியினர் விட்டு வழிப்பட்டனர்.

சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக்கொண்டனர். அதேபோல திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், நல்ல மணமகன் கிடைக்க வேண்டியும் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். திருமணமாகாத ஆண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி மஞ்சள் கயிற்றை கைகளில் கட்டிக்கொண்டனர்.

இதேபோல் புதுப்பெண்களுக்கு தாலியை பிரித்து கட்டும் நிகழ்ச்சியும் காவிரி படித்துறையில் நடந்தது. திருமணத்தின்போது கட்டப்பட்டிருந்த தாலிக்கு பதிலாக புது தாலியை அணிந்து கொண்டனர். பின்னர் வாழை மட்டையில் தீபத்தை வைத்து காவிரி ஆற்றில் மிதக்கவிட்டனர்.

திருவாரூர் கமலாலய குளம், ஒடம்போக்கியாற்றின் கரைகளில் காலை முதலே பெண்கள் கூட்டம் அலைமோதியது. படிக்கட்டுகளில் மஞ்சளில் பிள்ளையார் உருவம் செய்து வைத்து காதோலை கருகமணியுடன் பேரிக்காய், வாழைப்பழம், வெல்லம் கலந்த அரிசி ஆகியவற்றை படையலிட்டு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

மன்னார்குடி பாமணி நதிக்கரையில் புதுபாலம், மேலப்பாலம், மன்னை நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான பெண்கள் படையலிட்டு வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை துலாகட்டத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டனர். பாரம்பரிய முறையில் புதுப்பெண்கள் தாலி கயிறை பிரித்து கோர்த்தனர். புதுமண தம்பதிகள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிப்பட்டனர்.

முக்கடல் சங்கமிக்கும் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் காவிரி கடலோடு கலக்கும் சங்கம துறையில் பல்வேறு பகுதிகளில் இருந்து புதுமண தம்பதிகள் வந்து வழிபாடு நடத்தி, புதிய தாலி அணிந்தனர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க படித்துறை பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல போலீசார் மப்டியில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News