தமிழ்நாடு

நகரும் ஆலயம், தெய்வம் நம்மை நோக்கி வரும் அதிசயம்!

Published On 2023-01-25 11:13 GMT   |   Update On 2023-01-25 11:13 GMT
  • ரதத்திற்கும் நமக்குமான பந்தம் மிக பழமை வாய்ந்தது.
  • ஆன்மீகத்தை அழகியலோடு அணுகிய கலாச்சாரம் நம்முடையது.
  • பக்தர்கள் தங்கள் ஊர்களில் ஆதியோகியை தரிசிக்கும் வாய்ப்பாக ஆதியோகி ரதங்கள் வலம் வருகின்றன.

வண்ணமயமான பிரம்மாண்ட சிற்பம் அசைந்து வருவதை கண்டால் ஒருவருக்குள் எத்தனை பரவசம் பிறக்கும்? அந்த வியத்தகு தருணத்தை தரக்கூடியவை தேர்கள். நாம் வணங்கும் தெய்வத்தை சுமந்து கொண்டு, தெருக்களில் உருண்டோடி, பல வண்ண நிறத்தில் அலங்காரம் சூடி, கம்பீர கொடிகள் ஏந்தி தேர் வரும் அழகை பாடாத கவிஞர்கள் இல்லை. ஆன்மீகத்தை அழகியலோடு அணுகிய கலாச்சாரம் நம்முடையது.

தேர் திருவிழா என்பது நம் மரபில் காலம் கடந்து கடைப்பிடிக்கப்படும் வழக்கம். ரிக் மற்றும் அதர்வண வேதத்தில் தேர் குறித்த குறிப்புகள் உண்டு. "பத்ம", "ஸ்கந்த", "பவிஸ்ய" புராணங்களில் தேர் திருவிழா பற்றிய செய்திகளை பார்க்க முடிகிறது. ராமன் வனம் சென்றதும் தேரில்தான், பாரதத்தில் பாண்டவர்கள் போரை வென்றதும் ரதத்தில்தான். ரதத்திற்கும் நமக்குமான பந்தம் மிக பழமை வாய்ந்தது.

முல்லை கொடி படர்வதற்கு தேர் கொடுத்த பாரியை நாம் படித்திருக்கிறோம். மேலும் கோவில் அமைப்புகள் குறித்து திருநாவுக்கரசர் தன் பதிகத்தில் பாடுகிறபோது, சிதம்பரம் அருகில் உள்ள மேலக்கடம்பூர் கோவிலின் கருவறையை பார்த்து "கரக்கோயில்" என்கிறார். இதன் பொருள் தேர் போன்ற அமைப்புடைய கோவில் என்பதாகும். இலக்கியங்களில் தேர் குறித்து இது போல பல செய்திகள் உள்ளன. இதன் தார்பரியம் ஒன்று தான், கோவிலில் இருக்கும் கடவுளை பக்தர்கள் தேடி செல்வார்கள். ரதம் என்பது தன் பக்தர்களை நோக்கி கடவுள் வருகிறார்.

எந்த காரணத்தினாலோ தன்னை வந்து காண முடியாத பக்தர்களை, கடவுளே நேரில் சென்று பார்க்கிறார். மேலும் "ஊர் கூடி தேர் இழுப்போம்" என்பது பழமொழி. அந்த வகையில் தெய்வீகம் கடந்து இதில் சமூக நல்லிணக்கமும் இருப்பதை நாம் உணர முடியும். அனைத்து மக்களுக்கும் ஒரே தரிசனம் வழங்கி, அனைத்து மக்களாலும் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நகரும் கோவிலாக வலம் வருபவை ரதங்கள்.

திருவாரூர், ஶ்ரீவில்லிப்புத்தூர், கள்ளழகர், ஶ்ரீரங்கம், என தமிழகம் கண்ட பாரம்பரிய தேர் திருவிழாக்கள் ஏராளம். அந்த வரிசையில், சமீப ஆண்டுகளில் தமிழகத்தில் அனைவர் மனதிலும் இடம் பிடித்திருப்பது ஆதியோகி ரதம்.

ஈஷாவில் நிகழும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஆதியோகியில் இருந்து ரதங்கள் புறப்பட்டு ஒவ்வொரு மாவட்டங்களில் வலம் வருவது வழக்கம். கோவையில் பிரம்மாண்டமாக அருள் பாலிக்கும் ஆதியோகியை காண முடியாத பக்தர்கள் தங்கள் ஊர்களில் ஆதியோகியை தரிசிக்கும் வாய்ப்பாக இந்த ஆதியோகி ரதங்கள் வலம் வருகின்றன.

ஆயிரக்கணக்கான பக்தர்கள், தன்னார்வலர்களின் கோலாகலமாக வரவேற்பு கிடையே இந்த ஆண்டும் ஆதியோகி ரதங்கள் தமிழகமெங்கும் பவனி வருகின்றன. இந்த ஆண்டும் டிசம்பர் 17 அன்று ஈஷாவிலுள்ள ஆதியோகியில் இருந்து புறப்பட்ட 4 ரதங்கள், 50 நாட்களில் தமிழகத்தின் 25000 கி.மீ கடந்து, வரும் பிப்ரவரி 17 அன்று கோவை ஈஷா யோக மையத்தை அடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News