பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் வழக்கு: எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
- பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்றும் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
- கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? என நீதிபதி கேள்வி
சென்னை:
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு நகலை ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தது. பின்னர் விசாரணை தொடங்கியது.
தற்போது பொதுக்குழு கூட்டியதே செல்லாது என்பதே எங்கள் வழக்கு என்றும், இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காகவே இந்த பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 5 ஆண்டு பதவிக்காலம் உள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளரை ஓரங்கட்டிவிட முடியாது என்று குறிப்பிட்ட அவர் பல கருத்துக்களை முன்வைத்தார்.
பொதுக்குழு கூட்டம் நடத்தும் உரிமையை பறிக்கக் கூடாது என்றும், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்றும் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். கட்சி நலனுக்காக வழக்கு தொடுத்திருப்பதாக கூறும் ஓபிஎஸ் தன்னையே எதிர்மனுதாரராக சேர்த்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டார்.
கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? பொதுக்குழுவை கூட்டுவதற்கு தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? பொதுக்குழுவை கூட்டுவதற்கு எத்தனை நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பப்படவேண்டும்? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய நீதிபதி, நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டடார். வழக்கு விசாரணையை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தார்.