தமிழ்நாடு (Tamil Nadu)

அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளர் யார்?- இன்று அறிவிப்பு வெளியாகிறது

Published On 2023-02-06 02:56 GMT   |   Update On 2023-02-06 02:56 GMT
  • ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் செந்தில்முருகன் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார்.
  • இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுபவருக்கு தனது ஆதரவை அளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் திடீரென அறிவித்தார்.

சென்னை

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்த நிலையில், அக்கட்சி பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அ.தி.மு.க. தலைமைப் பொறுப்பை கையகப்படுத்துவதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ள சூழ்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசுவை எடப்பாடி பழனிசாமியும், எம்.பி.ஏ. பட்டதாரியான செந்தில் முருகனை ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளராக அறிவித்தனர்.

இதனால், யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அ.தி.மு.க. பொதுக்குழு மூலமாகவே வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும், இந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அணியை பங்கேற்க செய்ய வேண்டும் என்றும் கூறியது.

தற்போது, அ.தி.மு.க.வில் 2,750 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில், 2,662 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள். மீதமுள்ள 148 பேர் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக உள்ளனர்.

இதனால், அதிக அளவில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமி அணியினர் சுறுசுறுப்பு அடைந்தனர். வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு ஆதரவை பெறுவதற்கான வேலையில் தீவிரம் காட்டினர்.

இரு தரப்பை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் இருந்து விண்ணப்ப படிவமும், உறுதிமொழி பத்திரமும் வழங்கப்பட்டது. பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு ஒப்புதல் அளித்து உள்ளதாக தெரிகிறது.

இந்த ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திட்டு, தனது கட்சி உறுப்பினர் அட்டை, ஆதார் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றுடன் நேற்று இரவு 7 மணி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கினார்கள். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் யாரும் கடிதம் வழங்கவில்லை.

ஏற்கனவே, ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் செந்தில்முருகன் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். இந்த நேரத்தில், கூட்டணி கட்சியான பா.ஜ.க. தரப்பில், தி.மு.க. கூட்டணி வேட்பாளரை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை களம் இறக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தது.

ஆனால், இந்த கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுபவருக்கு தனது ஆதரவை அளிப்பதாக, ஓ.பன்னீர்செல்வம் திடீரென அறிவித்தார். இதனால், அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது. நேற்று சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், நேற்று இரவு 7 மணி வரை 85 சதவீத உறுப்பினர்கள் கடிதத்தை கொடுத்து விட்டதாகவும், இன்று காலை வரை கடிதம் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கிய படிவங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பதற்காக, அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார். அவருடன் சி.வி.சண்முகம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் செல்கிறார்கள்.

அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களின் படிவங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுக்கொண்டால், அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு என்றும், அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்றும், இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து அவர் நாளை (செவ்வாய்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

Tags:    

Similar News