பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் - அன்னபூர்ணா உணவக நிறுவனம் அறிக்கை
- சொந்த விருப்பத்தின் பேரிலேயே அன்னபூர்ணா உரிமையாளர் நிதியமைச்சரை சந்தித்தார்.
- அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கோரியுள்ளது.
ஜிஎஸ்டி குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அன்னபூர்ணா உணவக நிர்வாகம் விளக்கம் அளித்து அவர்களது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "செப்டம்பர் 11ல் நிதி அமைச்சர் உடனான உரையாடல் வைரல் ஆனதால் சொந்த விருப்பத்தின் பேரிலேயே அன்னபூர்ணா உரிமையாளர் அவரை சந்தித்தார்
இந்த தனிப்பட்ட சந்திப்பின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கோரியுள்ளது. வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு நன்றி
தேவையற்ற அனுமானங்கள், அரசியல் தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம். இந்த விவகாரத்தை முடித்துவிட்டு வழக்கமான பணியை தொடர விரும்புகிறோம். எங்களு ஆதரவு அளித்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.