ஓடும் ரெயிலில் பிரசவ வலி: பயணிக்கு பிரசவம் பார்த்த பெண் போலீஸ்
- அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 2-வது நடைமேடைக்கு ரெயில் வந்துகொண்டிருந்தபோது சாந்தினிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
- அரக்கோணம் ரெயில்வே டாக்டரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சாந்தினி அழைத்து செல்லப்பட்டார்.
சென்னை:
மங்களூருவில் இருந்து சென்னை சென்டிரல் வரை செல்லும் ''வெஸ்ட் கோஸ்ட்'' விரைவு ரெயிலில் திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் ஸ்டேசன் மாஸ்டராக வேலை பார்க்கும் அஸ்வின் குமார் தனது மனைவி சாந்தினியுடன் பயணம் செய்தார். நிறைமாத கர்ப்பிணியான சாந்தினியை பெரம்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிப்பதற்காக திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து இருவரும் ஏறினர்.
மதியம் 2.20 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 2-வது நடைமேடைக்கு ரெயில் வந்துகொண்டிருந்தபோது சாந்தினிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீஸ் பரமேஸ்வரி துரிதமாக செயல்பட்டு சாந்தினியை ரெயிலில் இருந்து இறக்கி அருகில் இருந்த பயணிகள் தங்கும் அறைக்கு அழைத்துச்சென்றார். சிறிது நேரத்தில் பயணிகள் தங்கும் அறையிலேயே அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதனிடையே அரக்கோணம் ரெயில்வே டாக்டரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சாந்தினி அழைத்து செல்லப்பட்டார். அங்கு தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
துரிதமாக செயல்பட்டு பிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை ரெயிலில் இருந்து இறக்கி பயணிகள் ஓய்வு அறைக்கு அழைத்துச்சென்று பிரசவத்துக்கு உதவியாக இருந்த பெண் போலீஸ் பரமேஸ்வரியை பயணிகளும், பொதுமக்களும் வெகுவாக பாரட்டினர்.