தமிழ்நாடு (Tamil Nadu)

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை: எல்.முருகன் கண்டனம்

Published On 2024-07-06 00:57 GMT   |   Update On 2024-07-06 00:57 GMT
  • பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மநபர்கள் வெட்டியதில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
  • திமுக அரசின் மெத்தனத்தின் தொடர்ச்சியே சகோதரர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் வந்து நிற்கிறது.

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மநபர்கள் வெட்டியதில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இவரது படுகொலை சம்பவத்திற்கு பாஜக மாநில முன்னாள் தலைவரும் இணையமைச்சருமான எல்.முருகன் இரங்கலும், தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த எக்ஸ் தள பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சமூகவிரோத கும்பல்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன்..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது சமூக விரோத கூலிப்படை கும்பல் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்துள்ளார்கள்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் போலி திராவிட மாடல் ஆட்சியில் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கும் மற்றும் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளராக இருப்பவருக்கும் பாதுகாப்பில்லை. அதுவும் சென்னை பெரம்பூர் போன்ற முக்கிய நகர்ப்புறத்தில் சமூக விரோத கும்பல் படுகொலை செய்து தப்பி ஓடுவது போலி திராவிட மாடல் திமுக அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பில் இருக்கும் காவல் துறையும், உளவுத் துறையும் முற்றிலும் சீரழிந்து சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதையே இந்த படுகொலை நிரூபித்துள்ளது.

வேங்கை வயல், கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணம் ஆகிய சம்பவத்தில் ஒடுக்கப்பட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில், செயலற்று நடவடிக்கை எடுக்காமல் நின்ற திமுக அரசின் மெத்தனத்தின் தொடர்ச்சியே சகோதரர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் வந்து நிற்கிறது.

போலி திராவிட மாடல் அரசு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News