மதுபான விடுதி விபத்து - காவல் நிலையத்தில் சரணடைந்த உரிமையாளர்
- விபத்து தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- விபத்து தொடர்பாக போலீசார் அதிரடி விசாரணை.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியில் கடந்த 28 ஆம் தேதி மாலை முதல் மாடியின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாட்டில் சிக்கி மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மேக்ஸ் என்ற வாலிபர், திருநங்கை லவ்லி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த சைக்ளோன் ராஜ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
கட்டிடம் இடிந்து விழுந்தபோது டமார் என்று பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதுமே அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தென்சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் சிபி சக்ரவர்த்தி மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மதுபான விடுதி விபத்து தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் விடுதி மேலாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்ற 11 பேர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
விபத்தில் சிக்கிய விடுதியின் உரிமையாளரான அசோக் குமார் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், மதுமான விடுதயின் உரிமையாளர் அசோக் குமார் அபிராமபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.