தமிழ்நாடு

அறிவார்ந்த புத்தகங்களை வாசியுங்கள்... ஈரோடு புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் உரை

Published On 2022-08-05 15:10 GMT   |   Update On 2022-08-05 15:10 GMT
  • புத்தக கண்காட்சிகளுக்காக இந்த ஆண்டு, 4 கோடியே 96 இலட்சம் ரூபாய் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழின் பெருமையை, சிறப்பை உணருவதற்கு புத்தகத் திருவிழாக்கள்தான் அடித்தளமாக அமைகின்றன

ஈரோடு:

மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோட்டில் ஆண்டு தோறும் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்று காரணமாக இந்த புத்தக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு புத்தக திருவிழாவை ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் ஆகஸ்ட் 5 முதல் 16 -ந் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி புத்தக திருவிழா இன்று தொடங்கியது.

இன்று மாலை துவக்க விழா நடைபெற்றது. சென்னையில் இருந்து முதல் அமைச்சர் மு. க.ஸ்டாலின் காணொலி மூலம் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் பிறந்த ஊரில் - அறிவுத் திருவிழாவான புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தன்னைப் போன்ற எழுத்தாளர்களை, பேச்சாளர்களை, அறிஞர்களை, தமிழ்ப்புலவர்களை, படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் ஈரோட்டில் புத்தகத் திருவிழாவை நடத்தத் தொடங்கி பதினெட்டு ஆண்டுகளாக தொய்வில்லாமல் நடத்தி வருகிறார் ஸ்டாலின் குணசேகரன். அவரது அயராத தமிழ் ஆர்வத்தை அனைவரும் பாராட்ட வேண்டும். இதுபோன்ற ஆர்வலர்கள் தமிழ்நாடு முழுவதும் உருவாக வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் ஸ்டாலின் குணசேகரன்கள் உருவாக வேண்டும்!

புத்தக வெளியீட்டு விழாக்களில் கலந்துகொள்வதும், புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பதும் மகிழ்ச்சிக்குரியது. ஏனென்றால் இவை அறிவுத்திருவிழா! தமிழ்த் திருவிழா! தமிழாட்சி - தமிழர்களின் ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது தமிழ்நாட்டில். இத்தகைய தமிழாட்சி நடக்கும் நாட்டில் தமிழ்த் திருவிழாக்களும் அதிகம் நடந்தாக வேண்டும்.

சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றேன்.

சென்னையைத் தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் தான் இதுபோன்ற கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியோடு இத்தகைய புத்தகக் கண்காட்சி நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். அதற்காக இந்த ஆண்டு, 4 கோடியே 96 இலட்சம் ரூபாய் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்த முதலில் ஜனவரி மாதம் தேதி குறிக்கப்பட்டது. கொரோனா பரவிய காரணத்தால் தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே அரங்கம் அமைத்து விட்ட காரணத்தால் பதிப்பாளர்களுக்கு இழப்பும் ஏற்பட்டது. இதனை முன் வைத்து பதிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். உடனடியாக 50 லட்சம் ரூபாயை இழப்பீடு தொகையாக வழங்கிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி!

வழக்கமாக, சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் 75 லட்சத்துடன் இந்த ஐம்பது லட்சத்தையும் சேர்த்து ஒன்றே கால் கோடி ரூபாயை வழங்கினோம். இதைத் தொடர்ந்து, பதிப்பாளர்களின் நெடுநாள் கோரிக்கையான நிரந்த புத்தகப் பூங்கா அமைப்பதற்கான ஒப்புதலையும் தமிழக அரசு வழங்கி இருக்கிறது.

தமிழின் பெருமையை, சிறப்பை தமிழர்கள் அனைவரும் உணருவதற்கு இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள்தான் அடித்தளமாக அமைகின்றன. பட்டங்கள் வாங்குவதற்காக மட்டுமல்லாமல், அறிவின் கூர்மைக்காக, நம்முடைய சிந்தனையை வளர்த்துக் கொள்வதற்காக, நாம் கடந்து வந்த பாதையை அறிந்துகொள்வதற்காக, நாம் போக வேண்டிய திசையை சென்றடைவதற்காக, அறிவார்ந்த புத்தகங்களை அனைவரும் வாசிக்க வேண்டும்.

அதனால்தான் என்னைச் சந்திக்க வருபவர்கள் மாலைகள், சால்வைகள், போர்வைகள் அணிவிக்க வேண்டாம், புத்தகங்களைத் தாருங்கள் என்று நான் கேட்டுக் கொண்டேன். புத்தகம் வழங்குவது இன்றைக்கு ஒரு இயக்கமாகவே தமிழ்நாட்டில் மாறி இருக்கிறது. இந்த இயக்கம் விரிவடைய வேண்டும், வலுவடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அறியாமை எனும் இருட்டில் தத்தளிப்பவர்களுக்கு ஒளி கொடுக்கும் அறிவுச்சுடர்தான் புத்தகங்கள்! பொய்யும் புரட்டும் கலந்த பழமைவாதம் எனும் கடலில் சிக்கித் தவிக்காமல், நாம் கரை சேர உதவுகிற பகுத்தறிவுக் கப்பல்கள்தான் புத்தகங்கள்!

'வீட்டுக்கு ஒரு நூலகம் அமைய வேண்டும்' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் விரும்பினார்கள். அப்படி அனைவரும் தங்கள் வீட்டில் சிறு நூலகமாகவாவது அமைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக்கொள்ளும் பண்பாடு வளர வேண்டும்! வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அறிவார்ந்த நூல்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்! சிந்தனையில் தெளிவு ஏற்படும் புத்தகங்களை வாசிக்கத் தூண்டுங்கள்!

புத்தகத் திருவிழா துவக்க விழாவில் பங்கேற்றவர்கள்

இளைஞர்களே… நிறைய படியுங்கள்! ஏன்… எதற்கு… எப்படி? என்று கேளுங்கள்! ஒரு செய்தி உங்களை வந்தடைகிறது என்றால், அதனை உடனே முழுமையாக நம்பிவிடாதீர்கள்! அதன் உண்மைத்தன்மையை ஆராயுங்கள்! எது உண்மை என்று அறிய வேண்டும் என்றால் நிறைய படிக்க வேண்டும்! இட்டுக்கட்டிக் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுபவர்கள் – அந்தக் கலையில் தேர்ந்தவர்கள்! ஆண்டாண்டு காலமாக கட்டுக்கதைகளை நம்ப வைக்கும் திறனைப் பெற்றவர்கள்!

ஆனால், தமிழ்ச்சமூகம் பகுத்தறிவுச் சமூகம்! பொய்களையும் – கட்டுக்கதைகளையும் வென்ற சமூகம்! தமிழகம் அறிவுப் புரட்சி மாநிலமாக - பகுத்தறிவுப் புரட்சி மாநிலமாக மாறுவதற்கு இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் அனைத்து நகரங்களிலும் நடைபெற வேண்டும். அறிவே அனைத்துக்கும் அரண். புத்தகங்களே புத்துணர்வு அமுதம். எல்லாவற்றுக்கும் ஈரோடு வழிகாட்டியது போல புத்தகத் திருவிழாவுக்கும் வழிகாட்டுகிறது ஈரோடு.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News