தமிழ்நாடு

எழும்பூர்-புதுச்சேரி பாசஞ்சர் ரெயில் பெட்டி கழிவறையில் பயணம் செய்யும் சிறுவர்கள்

Published On 2023-05-25 10:02 GMT   |   Update On 2023-05-25 10:02 GMT
  • பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடம் இல்லாததால் கழிவறையில் நின்று பயணம் செய்ய அனுமதிக்கின்றனர்.
  • புதுச்சேரியில் இருந்து தாம்பரம் வரை இந்த அவலநிலை நீடிக்கிறது.

சென்னை:

சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு நேரடி ரெயில் சேவை காலை மற்றும் மாலையில் உள்ளது.

முன்பதிவு இல்லாத இந்த ரெயிலில் சாதாரண டிக்கெட் பெற்று பயணிகள் எளிதில் பயணம் செய்ய முடியும் ரெயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வந்தால் இருக்கை கிடைத்துவிடும்.

ஆனால் புறப்படும் நிலையத்தை தவிர இடையில் உள்ள நிலையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏறுவதால் இருக்கைகள் மட்டுமின்றி உடமைகள் வைக்கக் கூடிய பகுதி, நடைபாதையில் எல்லாம் மக்கள் அமர்ந்து பயணம் செய்கின்றனர்.

குறிப்பாக புதுச்சேரியில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு காலை 9 மணிக்கு வந்து சேரும் பாசஞ்சர் ரெயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது.

அந்த ரெயில் விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் போன்ற நிலையங்கள் தவிர சிறிய நிலையங்களிலும் நின்று செல்வதால் வழி நெடுக மக்கள் ஏறுகிறார்கள். இதனால் படிக்கட்டில் நின்று பயணம் செய்கின்ற நிலை காணப்படுகிறது.

பெண்கள், வயதானவர்கள் ரெயில் பெட்டியில் இடம் இல்லாததால் வழியில் அமர்ந்து பயணிக்கின்றனர். சிலர் கழிவறையில் நின்று பயணம் செய்கின்றனர். பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடம் இல்லாததால் கழிவறையில் நின்று பயணம் செய்ய அனுமதிக்கின்றனர். கழிவறையில் நின்றால் யாருக்கும் இடையூறாக இருக்காது எனக் கருதி அங்கே விட்டு விடுகின்றனர்.

பாதுகாப்பு இல்லாத சுகாதாரமில்லாத அந்த இடத்தில் சிறுவர்கள் மட்டுமின்றி பெண்களும் நிற்கின்றனர். இதனால் அவசரமாக கழிவறையை பயன்படுத்த நினைப்பவர்கள் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. புதுச்சேரியில் இருந்து தாம்பரம் வரை இந்த அவலநிலை நீடிக்கிறது.

எனவே புதுச்சேரி - சென்னை இடையே ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

Tags:    

Similar News