கோவை கார் குண்டு வெடிப்பு - தமிழகம் முழுக்க என்.ஐ.ஏ. விசாரணை - 4 பேர் கைது
- தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
- 25 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகத்தில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது. தமிழகத்தின் 21 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்துடன் ஆறு மடிக்கணினிகள், 25 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் கோவை மாவட்டத்தின் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை அடுத்து ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு, இந்த வழக்கு என்.ஐ.ஏ.-வுக்கு மாற்றப்பட்டது. அந்த வகையில், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகவே இன்று தமிழகம் முழுக்க என்.ஐ.ஏ. சோதனை மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.