தமிழ்நாடு

சென்னையில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு

Published On 2023-12-29 02:56 GMT   |   Update On 2023-12-29 02:56 GMT
  • தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது.
  • கொரோனா பாதிப்பில் இருந்து 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

சென்னை:

கொரோனா தொற்று கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் உகான் மாநிலத்தில் பரவி உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த தொற்று தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊடுருவியது. இதனால், தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகரித்து வந்தது. அதன்பின், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தது. தொடர்ந்து, கொரோனாவிற்கு தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்பட்டு படிப்படியாக கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது.

இதையடுத்து, மீண்டும் உருமாறிய புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கேரளாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு வேகமாக பரவ தொடங்கியது.

அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. நீண்ட நாட்களாக கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் இருந்தது. இந்தநிலையில், நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி (வயது 55) என்பவர் உயிரிழந்தார்.

தமிழ்நாட்டில் நேற்று 158 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் 16 பேர், கோவையில் 3 பேர், நீலகிரி, ராணிப்பேட்டை, சேலம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News