தமிழ்நாடு
குற்றாலம் ஐந்தருவியில் இன்று காலை சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதிய காட்சி.

குற்றாலம் ஐந்தருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

Published On 2022-08-01 10:20 GMT   |   Update On 2022-08-01 10:20 GMT
  • தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
  • ஐந்தருவியில் எவ்வித ஆபத்தும் இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் அங்கு அதிகமாக சென்று குளித்து மகிழ்கின்றனர்.

தென்காசி:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. பாளை, அம்பை, சேரன்மகாதேவி, பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.

சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் விவசாய பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அணைகளில் இருந்து ஏற்கனவே நீர் திறக்கப்பட்டு உள்ளதால் கோபாலசமுத்திரம், சுத்தமல்லி, மேலச்செவல், பத்தமடை, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் கார் பருவ நெற்பயிர் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 66.85 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணையில் 78.80 அடியும், மணிமுத்தாறு அணையில் 78.20 அடியும் நீர் இருப்பு உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 544 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கேரளா மாநிலத்தின் எல்லைக்குட்பட்ட கும்பாவுருட்டி அருவியில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ஒருவர் உயிரிழந்தார்.

இதனையொட்டி நேற்று மாலை முதல் இன்று காலை வரை குற்றாலம் அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று காலை குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இன்று குற்றாலம் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. அதேநேரத்தில் ஐந்தருவியில் எவ்வித ஆபத்தும் இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் அங்கு அதிகமாக சென்று குளித்து மகிழ்கின்றனர்.

மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், தென்காசி, ஆய்குடி, கடையநல்லூர், சிவகிரி உள்ளிட்ட இடங்களில் சாரல்மழை விட்டு விட்டு பெய்தது.

அணை பகுதிகளை பொறுத்தவரை குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிரம்பி வழிகிறது. கருப்பாநதியில் 4 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

Tags:    

Similar News