தமிழ்நாடு

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு

Published On 2023-06-23 06:50 GMT   |   Update On 2023-06-23 06:50 GMT
  • கடல் பசு மீது பிளாஸ்டிக் கவர் ஒன்றை போட்டு மூடி வனத்துறையினர் இரவு முழுவதும் பாதுகாத்தனர்.
  • பிரேத பரிசோதனை செய்த பின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என்று மண்டபம் வனச்சரகர் தெரிவித்தார்.

ராமநாதபுரம்:

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பல்லி, கடல் குதிரை, கடல் பசு, சிப்பி, சங்கு, பவளப்பாறைகள் என சுமார் 1400-க்கும் அதிக மான அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலைகளில் சமீப காலமாக கடல் பசு, டால்பின் உள்ளிட்டவை சிக்குகிறது. அதனை உடனடியாக மீனவர்கள் உயிருடன் பத்திரமாக கடலில் விட்டு விடுகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு பாம்பன் தெற்கு மன்னா் வளைகுடா தோனித்துறை கடற்கரையில் இறந்த நிலையில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியது. இதை கண்ட மீனவர்கள் மண்டபம் வனச்சரகர் மகேந்திரனுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து பறவைகள், நாய் உள்ளிட்டவைகள் இறந்த கடல் பசுவின் உடலை சேதபடுத்தாமல் இருக்க கடல் பசு மீது பிளாஸ்டிக் கவர் ஒன்றை போட்டு மூடி வனத்துறையினர் இரவு முழுவதும் பாதுகாத்தனர்.

இறந்த நிலையில் கரை ஒதுங்கியது கடல் பசு 1500 கிலோ எடை கொண்டதாக இருக்கலாம் எனவும், கடல் பசு பாறைகளில் முட்டியதால் உயிரிழந்ததா? அல்லது உடல் நிலை சரியில்லாமல் வயதின் மூப்பின் காரணமாக உயிரிழந்ததா? என கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என்று மண்டபம் வனச்சரகர் தெரிவித்தார். கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் கடற்கரை மணலில் வனத்துறையினர் பள்ளம் தோண்டி புதைத்தனர்.

Tags:    

Similar News