தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்: கனிம வளங்கள் கடத்தப்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்
- போதிய அடிப்படை வசதிகள் இல்லை என கூறி 3 மருத்துவக்கல்லூரிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் சி.சி.டி.வி. கேமிரா இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சாக்கு போக்கு சொல்கிறார்.
- கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் கொடுத்தது ஏன்? மக்கள் வரிப்பணத்தை எதற்காக அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க கோரியும், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் படு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜர் சிலை அருகே தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பழனிசங்கர் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட அவைத்தலைவர் சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-
போதிய அடிப்படை வசதிகள் இல்லை என கூறி 3 மருத்துவக்கல்லூரிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் சி.சி.டி.வி. கேமிரா இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சாக்கு போக்கு சொல்கிறார்.
வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைக்கு இடையூறு செய்யக்கூடாது. அவர்கள் தகவல் சொல்லி விட்டா வந்து சோதனை நடத்துவார்கள்? சோதனைக்கு இடையூறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் கொடுத்தது ஏன்? மக்கள் வரிப்பணத்தை எதற்காக அவர்களுக்கு கொடுக்க வேண்டும். 2 வருடங்களுக்கு முன்பு கனிமொழி எம்.பி. பேசும் போது, தமிழகத்தில் தான் இளம் விதவைகள் அதிகம் இருப்பதாக கூறினார்.
இப்போது கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்திற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.
நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணிகள் கடந்த 2 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு, ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கமிஷன் கொடுக்க வேண்டியது இருப்பது தான் இதற்கு காரணம்.
இயற்கை வளங்களை அழிக்ககூடாது. தென்காசி மாவட்டம் வழியாக அளவுக்கு அதிகமாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தி கொண்டு செல்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். ஆனால் இன்னும் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
மின் கட்டணத்தை குறைப்போம் என்றார்கள். ஆனால் விலைவாசி தான் 3 மடங்கு அதிகரித்துவிட்டது. ஆவின் பால் வினியோகமும் மோசமாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகவேல், மாநில இளைஞரணி துணை செயலாளர் ராஜேந்திர நாத், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சோலை கனகராஜ், மாவட்ட இளைஞரணி பொருளாளர் வக்கீல் சந்துரு, பேரூர் செயலாளர் திருமலை செல்வம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.