தமிழ்நாடு

சுப்புலட்சுமி ஜெகதீசன்

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா?

Published On 2022-09-19 06:28 GMT   |   Update On 2022-09-19 10:09 GMT
  • மறைந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனுக்கு பின்பு நீண்ட காலமாக துணை பொதுச்செயலாளர் பதவியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் இருந்து வருகிறார்.
  • தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்காமல் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் அவரது கணவர் ஜெகதீசன் ஆகியோர் புறக்கணித்தனர்.

ஈரோடு:

முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சுப்புலட்சுமி ஜெகதீசன் தி.மு.க. துணை பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். மறைந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனுக்கு பின்பு நீண்ட காலமாக துணை பொதுச்செயலாளர் பதவியில் அவர் இருந்து வருகிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது இவரை எதிர்த்து பா.ஜ.க.வை சேர்ந்த சரஸ்வதி போட்டியிட்டார். இதில் 206 ஓட்டு வித்தியாசத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வி அடைந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது தோல்விக்கு அமைச்சர் முத்துசாமி மற்றும் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட 2 ஒன்றிய செயலாளர்கள் தான் காரணம் என்று குற்றம்சாட்டினார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சி தலைமையிடம் புகார் செய்தார். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த உள்கட்சி தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் புகார் செய்த 2 ஒன்றிய செயலாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் அவரது ஆதரவாளர்களுக்கும் பதவி வழங்கப்படவில்லை.

மேலும் தனக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்கும் என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் எதிர்பார்த்தார். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. இதனால் கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்தார்.

இதற்கிடையே கடந்த மாதம் ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் நடந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா மற்றும் பெருந்துறையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் சுப்புலட்சுமி ஜெகதீசனும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவர் ஜெகதீசன் சமீபகாலமாக கட்சி தலைமைக்கு எதிராக அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இதற்கு சுப்புலட்சுமி ஜெகதீசன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

கடந்த 15-ந்தேதி விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவில் பங்கேற்காமல் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் அவரது கணவர் ஜெகதீசன் ஆகியோர் புறக்கணித்தனர்.

இதற்கிடையே சமூக வலைதளங்களில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததாக தகவல் பரவியது. கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருந்ததாகவும் இதனால் அவர் ராஜினாமா செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உறுதி செய்ய முயன்றபோது சுப்புலட்சுமி ஜெகதீசனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் இன்று காலை முதல் பத்திரிகையாளர்களின் முயற்சிக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. மேலும் அவரது தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இதனால் ஈரோடு மாவட்ட தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை அவரது ஆதரவாளர்கள் மட்டும் சந்தித்து பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் இன்று தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது சுப்புலட்சுமி ஜெகதீசன் விவகாரம் பற்றியும் பேசப்பட்டதாக தெரிகிறது.

சுப்புலட்சுமி ஜெகதீசனின் ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில் அந்த இடம் காலியாகும். அடுத்த மாதம் நடைபெற உள்ள தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக துணை பொதுச் செயலாளர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

Tags:    

Similar News