நடுரோட்டில் நின்று மிரட்டிய யானைகள்- வாகன ஓட்டிகள் அச்சம்
- கோவை செல்லும் சாலையில் ஒரு பெரிய கரடி ரோட்டில் நடந்து சென்றது.
- நீலகிரி போக்குவரத்து சாலைகளில் யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்து உள்ளது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் வனத்தில் இருந்து வெளியேறி உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையடிவார குடியிருப்பு பகுதிகள் மட்டுமின்றி சாலைகளிலும் நடமாடி வருகின்றன.
ஊட்டியில் இருந்து மஞ்சூர் வழியாக கோவை செல்லும் சாலையில் ஒரு பெரிய கரடி ரோட்டில் நடந்து சென்றது. இதனை அவ்வழியாக சென்ற வாகனஓட்டிகள் செல்போனில் பதிவுசெய்து வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையில், யானைகள் கூட்டமாக ரோட்டின் நடுவே நடந்து சென்றதால் வாகனஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
இது மிகவும் குறுகிய சாலை என்பதால் வாகனங்கள் ஒலி எழுப்பினாலும் யானைகள் சாலையை விட்டு வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்குமிங்குமாக உலாவந்தன.
சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பிறகுதான் வாகனஓட்டிகள் நிம்மதி பெருமூச்சுடன் தங்களின் வாகனத்தை இயக்கி கோவை நோக்கி புறப்பட்டு சென்றனர்.
நீலகிரி போக்குவரத்து சாலைகளில் யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்து உள்ளது. அவை சாலையில் பல மணி நேரம் நிற்பதால் ரோட்டின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் டீசல், பெட்ரோல் விரயமும் ஏற்பட்டு வருகிறது.
எனவே நீலகிரி செல்லும் நெடுஞ் சாலைப்பகுதிகளில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, ரோட்டுக்கு வரும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடப்பட்டு உள்ளது.