மீன்பிடி தடைக்காலம் அமல் : நாகையில் விசைப்படகுகள் பழுது நீக்கும் பணி தீவிரம்
- ஒரு விசைப்படகை கரையேற்ற எந்திரம் மட்டுமல்லாமல் அதனுடன் சேர்ந்து 15 முதல் 20 பேர் வரை மனித உழைப்புகள் தேவைப்படுகிறது.
- இந்த ஆண்டு வெப்ப அனல் காற்று அதிகமாக வீசுவதால் வெயிலில் நின்று வெல்டு செய்யும் போது அதிக அனல் ஏற்படுகிறது.
நாகப்பட்டினம்
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடலோர மாநில மீனவர்களுக்கு 61 நாட்கள் கடலில் மீன்பிடிக்கத்தடை விதிக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவித்த மீன்பிடி தடைகாலம் கடந்த 15 தேதி அதிகாலை முதல் அமலுக்கு வந்தது.
நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, கல்லார், கீச்சாங்குப்பம், செருதூர், கோடியக்கரை, நம்பியார் நகர், நாகூர், புஷ்பவனம், ஆறுகாட்டுதுறை, வேதாரணி யம் உள்ளிட்ட 27 மீனவ பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை துறை முகங்களில் கட்டி பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் படகில் உள்ள வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பழுது நீக்கும் பணியில் மீனவர்கள், தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழுது நீக்கம் செய்து வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மீனவர்கள் கூறும்போது :-
ஒரு விசைப்படகை கரையேற்ற எந்திரம் மட்டுமல்லாமல் அதனுடன் சேர்ந்து 15 முதல் 20 பேர் வரை மனித உழைப்புகள் தேவைப்படுகிறது. இரும்பு விசைப்படகின் பழுதான சில பாகங்களை கேஸ் கட்டர் மூலம் வெட்டி எடுப்போம். அதேபோல் புதிய இரும்பினை பழுதான இடங்களில் பொருத்தும் போது ஆர்க் வெல்டு செய்வது வழக்கம்.
இந்த வேலை கடும் வெப்பத்தை ஏற்படுத்தும். அதிலும் இந்த ஆண்டு வெப்ப அனல் காற்று அதிகமாக வீசுவதால் வெயிலில் நின்று வெல்டு செய்யும் போது அதிக அனல் ஏற்படுகிறது. அவ்வப்போது தண்ணீரை மேலே ஊற்றிக் கொண்டும் ஈரத்துணியை சுற்றிக்கொண்டும் எங்கள் பணியை தொடர்கிறோம் என்றனர்.