3-வது முறை பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
- ஜனாதிபதியை சந்தித்த மோடி இன்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
- வரும் ஞாயிற்றுக்கிழமை மோடி பிரதமராக பதவியேற்க இருக்கிறார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களைக் கைப்பற்றியது.
பாராளுமன்றத்தின் மைய அரங்கில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பாராளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்து எம்.பி.க்களும் ஆதரவு அளித்தனர். ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்த மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்ததுடன் 3-வது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து, ஆட்சி அமைக்க ஜனாதிபதியும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், நாளை மறுநாள் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு அ.தி.மு.க. சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.