தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலி- மின்வேலி அமைத்த விவசாயி கைது

Published On 2023-03-08 03:31 GMT   |   Update On 2023-03-08 03:31 GMT
  • இறந்த யானைகளிடம் பாச போராட்டம் நடத்தி கொண்டிருந்த குட்டியானைகளை பட்டாசு வெடித்து அருகே உள்ள வனப்பகுதிக்கு விரட்டினர்.
  • பலியாகி கிடந்த 3 யானைகளுக்கும் அந்த இடத்திலேயே 20 பேர் கொண்ட கால்நடை குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்துக்குட்பட்ட மாரண்டஅள்ளி காப்பு காட்டில் இருந்து சமீபத்தில் ஒரு மக்னா யானை, 2 பெண் யானைகள், 2 குட்டி யானைகள் வெளியேறின. இவை பாலக்கோடு அருகே உள்ள ஆத்துக்கொட்டாய், நல்லூர், சென்னப்பன் கொட்டாய் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாரண்டஅள்ளி வனப்பகுதி அருகே உள்ள கிராமங்களில் சுற்றிய 5 யானைகளும் அப்பகுதியில் உள்ள காளிகவுண்டன் கொட்டாய்க்குள் புகுந்தன.

அப்போது அங்கு சக்திவேல் என்பவரின் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 25 வயது மதிக்கத்தக்க மக்னா யானை, அதே வயதுடைய 2 பெண் யானைகள் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தன.

இதில் அதிர்ஷ்டவசமாக 2 குட்டி யானைகள் உயிர் தப்பின. அவை உயிரிழந்த யானைகளை சுற்றி சுற்றி வந்தபடி பாசப்போராட்டம் நடத்தியது. மேலும், அந்த யானைகள் இறந்தது தெரியாமல் தனது துதிக்கையால் குட்டியானைகள் அதனை தட்டி எழுப்பி கொண்டிருந்தன.

நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் பற்றி அந்த பகுதி மக்கள் வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில் மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்து வனத்துறையினர், இறந்த யானைகளிடம் பாச போராட்டம் நடத்தி கொண்டிருந்த குட்டியானைகளை பட்டாசு வெடித்து அருகே உள்ள வனப்பகுதிக்கு விரட்டினர்.

பலியாகி கிடந்த 3 யானைகளுக்கும் அந்த இடத்திலேயே 20 பேர் கொண்ட கால்நடை குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் 3 யானைகளின் உடல்களும் அந்த பகுதியில் பெரிய குழி தோண்டி புதைக்கப்பட்டன. யானைகள் புதைக்கப்பட்ட இடத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் மாலைகள் வைத்தும், பூக்களை தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

3 யானைகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் நடந்த விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து சட்ட விரோதமாக மின்வேலி அமைத்த பாறைக்கொட்டாயை சேர்ந்த முருகேசன் (வயது 60) என்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர். சட்ட விரோதமாக மின்வேலி அமைத்தது தொடர்பாக, மின்வாரியத்தினர் கொடுத்த புகாரின்பேரில் மாரண்டஅள்ளி போலீசாரும், முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News