தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய கோரி விவசாயிகள் கஞ்சி தொட்டி திறந்து காத்திருப்பு போராட்டம்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- 10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை முழக்கங்களையும் எழுப்பினர்.
நீலாம்பூர்:
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் விவசாயிகள் தென்னை விவசாயத்தை காக்க வலியுறுத்தியும், கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், கோவை மாவட்டம் சூலூர், செஞ்சேரி மலை பச்சாபாளையத்திலும் விவசாயிகள், தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை வழங்க வேண்டும்.
விளைநிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளிடம் இருந்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ந் தேதி போராட்டத்தை தொடங்கினர்.
ஒவ்வொரு நாளும் வித்தியாசமான போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 8-வது நாள் போராட்டத்தின் போது, விவசாயிகள், கோவை மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் வேலு மந்திராச்சலம் தலைமையில் கஞ்சித் தொட்டி திறந்து கஞ்சி காய்ச்சி அதனைக் குடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை முழக்கங்களையும் எழுப்பினர். இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இன்று 9-வது நாளாக போராட்டம் நடக்கிறது.