தமிழ்நாடு

சிறுமியின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

பாலியல் தொந்தரவு செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டல்- சேலம் அருகே விஷம் குடித்த சிறுமி உயிரிழப்பு

Published On 2022-11-16 17:15 GMT   |   Update On 2022-11-16 17:15 GMT
  • மீட்கப்பட்ட சிறுமியை மணியின் தந்தை மற்றும் சித்தப்பா மகன் ஆகியோர் மீண்டும் மிரட்டியதாக புகார்
  • ஆபாசமாக எடுத்த படத்தை வெளியிடுவதாக மிரட்டவே சிறுமி கடந்த மாதம் 25-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

சேலம்:

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த சிறுமியுடன் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் மணி (வயது 23) என்பவர் பழகி வந்தார். தொடர்ந்து ஆசைவார்த்தைகள் கூறி பழக்கத்தை அதிகப்படுத்தினார்.

இதனால் மாணவி அவர் நல்லவர் என நம்பினார். திடீரென மணி, மாணவியிடம் காதலிப்பதாக கூறினார். இதற்கு மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மணி, தனது ஆதரவாளர்களுடன் கடத்திச் சென்று மாணவியை திருமணம் செய்து கொண்டு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து அதனை வீடியோ எடுத்து மிரட்டினார். இதனால் மாணவி மனம் உடைந்தார்.

அதிர்ச்சியில் உறைந்த மாணவி இது தொடர்பாக கைகாத்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமியை மணியின் தந்தை மற்றும் சித்தப்பா மகன் ஆகியோர் மீண்டும் மிரட்டியதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து வாலிபரின் தந்தை அவரது சித்தப்பா மகன் இருவரையும் கைகாத்தான் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து ஆபாசமாக எடுத்த படத்தை வெளியிடுவதாக மிரட்டவே சிறுமி கடந்த மாதம் 25-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை மீட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வீரகனூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

சிறுமி தற்கொலை செய்வதற்கு முன்பு சாவுக்கு காரணமானவர்கள் பற்றி உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News