தமிழ்நாடு

நாதஸ்வரம் வாசிக்கும் அரசு பள்ளி மாணவி: கலைத்திருவிழா போட்டியில் மாநில அளவில் சாதனை

Published On 2023-11-29 07:15 GMT   |   Update On 2023-11-29 07:15 GMT
  • ஜெயமித்ரா வீட்டில் தனது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்கும்போது அதனை பார்த்து கொண்டிருப்பார்.
  • ஜெயமித்ரா நாதஸ்வரம் வாசிக்கும் நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டினார்.

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் (வயது 42) இவரது மகள் ஜெயமித்ரா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது சகோதரி லீனா (வயது 13) அதே பகுதியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார் இவரது தம்பி மெதுஷ் (வயது 12) இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெயமித்ரா வீட்டில் தனது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்கும்போது அதனை பார்த்து கொண்டிருப்பார். அவருக்கு நாதஸ்வரம் எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை ஏற்பட்டது.

இதனால் தனது பெற்றோரிடம் நாதஸ்வரம் வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டார். ஆரம்பத்தில் மறுத்த அவர்கள் பின்பு கற்றுக்கொடுக்க தொடங்கினர்.

இதனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நாதஸ்வரம் கற்றுக்கொள்ள பயிற்சி எடுத்தார். அதன் பிறகு 2019 ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்காததால் வீட்டில் முழு மூச்சுடன் நாதஸ்வரம் கற்றுக்கொண்டார் சிறப்பாக வாசித்தார்.

கோவில் திருவிழா, கும்பாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தற்போது 10 ம் வகுப்பு படித்து வருவதால் தன்னுடைய கவனத்தை படிப்பில் செலுத்தினார். அப்போது தான் தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனால் ஜெயமித்ரா நாதஸ்வரம் வாசிக்கும் நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டினார்.

இந்த நிலையில் கச்சிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமியின் சீரிய முயற்சியில் அப்பள்ளியின் மாணவி ஜெயமித்ரா சென்னை மேலப்பாக்கம் பகுதியில் கடந்த 21-ந்தேதி மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் நாதஸ்வர போட்டியில் கலந்துகொண்டார்.

இதல் வெற்றி பெற்று 2-ம் இடம் பெற்று சாதனை படைத்தார். இதன் காரணமாக பள்ளி வளாகத்தில் பள்ளியின் மாணவர்களின் முன்னிலையில் நாதஸ்வர போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவியை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.

Tags:    

Similar News