ஊழியர் கொலை வழக்கில் தொடர்பு: தி.மு.க. ஒன்றிய செயலாளர் அதிரடி நீக்கம்
- ஆலய வளாகத்திற்குள் அடக்கம் செய்வதற்கு ஐகோர்ட்டு அனுமதி மறுத்துவிட்டது.
- கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பங்குத்தந்தை ராபின்சன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள மைலோடு மடத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் குமார் (வயது 42). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.
நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்தார். மேலும் மைலோடு கிறிஸ்தவ ஆலய பங்கு பேரவையின் முன்னாள் பொருளாளராகவும் இருந்துள்ளார். இவருக்கு ஜெமினி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஜெமினி, மைலோடு ஆலய நிர்வாகத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அவரை, பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சேவியர் குமார், ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்திற்கு சென்றார். அப்போது அங்கு நடந்த தகராறில் சேவியர் குமார் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ஜெமினி கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, பங்குத்தந்தைகள் ராபின் சன், பெனிட்டோ, பங்கு பேரவை துணைத் தலைவர் ஜஸ்டிஸ் ரோக், வின்சென்ட் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவர்களில் ஜஸ்டிஸ் ரோக், வின்சென்ட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
சேவியர் குமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்தனர். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், சேவியர் குமாரின் மனைவி ஜெமினிக்கு பணி வழங்க வேண்டும், 2 மகள்களுக்கும் ரூ. 2 கோடி வழங்க வேண்டும், மைலோடு ஆலய வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் ஆலய வளாகத்திற்குள் அடக்கம் செய்வதற்கு ஐகோர்ட்டு அனுமதி மறுத்துவிட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உறவினர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில் சேவியர் குமாரின் வீட்டிற்கு விஜய்வசந்த் எம்.பி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பலரும் நேரில் சந்தித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
இதற்கிடையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பங்குத்தந்தை ராபின்சன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை பங்கு பேரவையிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தக்கலை தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார். தி.மு.க.வுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சேவியர் குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மறுநாள் (26-ந்தேதி) போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெறும் இந்த போராட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்கிறார்.